“இளங்கோவடிகள் குறிப்பிட்ட சிறந்த மன்னன் போல் பிரதமர் இருப்பார்” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

வேலூர்: “2047-ல் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். மேலும், பிரதமர் மோடியின் செயல்பாடுகளை அவர் வெகுவாக பாராட்டினார்.

அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம், வேலூர் ஸ்ரீநாராயணி பீடம் இணைந்து 5 நாட்கள் நடத்தும் பாலாறு பெருவிழா இன்று தொடங்கியது. இவ்விழா ஸ்ரீபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஸ்ரீ நாராயணி பீடத்தின் சக்தி அம்மா மற்றும் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது: “சில நதிகளை நாம் தினமும் பிரார்த்தனை செய்வது புதிதல்ல. இது பழங்கால பாரம்பரியம். பாரதத்தின் பல பகுதிகளில் இருக்கும் மக்கள் அனைவரும் நதியை வழிபடுகின்றனர். இது சனாதான கலாசாரம். வடக்கே சிந்து முதல் தெற்கு காவிரி வரை வழிபடுவதுதான் பாரத கலாசாரம். ஆறுகள்தான் நமக்கு வாழ்வை தருகின்றன.

வேதகாலம் முதல் பஞ்ச பூதங்களை கடவுள்களாக வழிபட்டு வருகின்றோம். நதியை வழிபடுவது தெய்வீகம். திருவள்ளுவர் கூறியதுபோல் நீரின்றி அமையாது உலகு. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறியதுபோல் நல்ல மன்னன், மழை நீரை சேமிக்க குளம், ஏரிகளை வெட்டி மண் வளத்தை பாதுகாப்பான். அதேபால், நமது பிரதமரும் ‘அம்ரீத் சரோவர்’ திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்டங்களில் மழை நீரை சேமிக்க குளங்கள் வெட்டும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்படும். இதன் மூலம் இளங்கோவடிகள் குறிப்பிட்ட சிறந்த மன்னன் போல் பிரதமர் இருப்பார். பருவநிலை மாற்றத்தால் உலகம் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது. அடுத்த 40 ஆண்டுகளுக்குள் பல தீவுகள் நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் இருக்கிறது. இதற்கு இயற்கையை நாம் ஒரு பொருளாக பார்ப்பதே காரணம். 2016-ல் நமது பிரமதர் மாற்று எரிசக்தி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது, உலக நாடுகள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. தற்போது இந்தத் திட்டத்தில் 100 நாடுகள் இணைந்துள்ளன. இந்தியாவில் 2025ம் ஆண்டுக்குள் 100 கிகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே இலக்கை கடந்து விட்டோம். வரும் 2030ம் ஆண்டுக்குள் மாற்று எரிசக்தி மின் உற்பத்தியை 500 கிகா வாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாம் உலகிற்கு சொல்வது கிரகங்களை நாம் எவ்வாறு பாதுகாப்பது என்று. இந்த பூமியை, காலநிலை மாற்றத்தை பாதுகாப்பது என்பது நமது பழங்கால சனாதான முறை மூலம் சமநிலை உருவாக்குவோம். பூமி ஒன்றும் வளத்துக்காக மட்டும் கிடையாது. பூமி என்பது நமது தாய். நமது தாயை ஒரு வளமாக பார்க்காமல் தாயாக வணங்க வேண்டும்.

நமது நாடு கடந்த 1000 ஆண்டுகளில் வெளிநாட்டு படையெடுப்புகள், காலனி ஆதிக்கத்தால் பல இன்னல்களை சந்தித்துள்ளது. இப்போது நாடு விழிப்படைந்து தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அடுத்த 25 ஆண்டுகள் நமக்கு மிகவும் முக்கியமானது. 2047ம் ஆண்டு நாம் சுதந்திரம் அடைந்து 100-வது ஆண்டை கொண்டாட உள்ளோம். அந்த நேரத்தில் நாம் உலக நாடுகளின் விஷ்வ குருவாக கண்டிப்பாக இருப்போம்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அகில பாரத சந்நியாசிகள் சங்கத்தின் தலைவர்சாந்தலிங்க மருதாசல அடிகளார், மன்னார்குடி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ செண்டலங்கார சென்பக மன்னார் ராமானுஜ ஜீயர் சுவாமிகள்,சாமி ராமாநந்தா, பொதுச்செயலாளர் ஆத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.