தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் முகமது நபிகள் குறித்து அண்மையில், பா.ஜ.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு ராஜஸ்தான், மாநிலம் உதய்பூரைச் கன்ஹையா லால் என்ற டெய்லர் ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்றைய தினம் கன்ஹையா லாலின் கடைக்கு சென்ற இருவர் அவரின் தலையை துண்டித்துக் கொலைசெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
குற்றம்சாட்டப்பட்ட கொலைகாரர்கள் டெய்லரின் தலையை அரிவாளால் வெட்டியதோடு, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கின்றனர். இதையடுத்து, காவல்துறையினர் அந்த இரு நபர்களை கைதுசெய்தனர். அவர்கள் ரியாஸ், கவுஸ் என அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
நுபுர் ஷர்மா தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு கன்ஹையா லால் ஆதரவு தெரிவித்துவந்த நிலையில், இவருக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வந்திருக்கின்றன. இதையடுத்து, கன்ஹையா லால் இறப்பதற்கு 5 நாள்களுக்கு முன்பு போலீஸில் தனக்கு பாதுகாப்பு தருமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார். மேலும், போலீஸார் இந்த விவகாரம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கின்றனர்.
கன்ஹையா லால் தனக்கு பயங்கரமான மிரட்டல்கள் வந்ததையடுத்து, தனது கடையை 5 நாள்கள் மூடிவைத்திருந்ததாக அந்தப் பகுதியைச் சேர்ந்த சில உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். மேலும், “புகாரளித்து பாதுகாப்பு கோரியும், அவருக்கு ராஜஸ்தான் போலீஸார் எந்தவித பாதுகாப்பும் அளிக்காததால்தான் நேற்று கொடூரமாக படுகொலைசெய்யப்பட்டிருக்கிறார்” என உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “வன்முறை, தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. உதய்பூரில் நடந்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.