புதுடெல்லி: ராஜஸ்தானின் உதய்பூரில் தையல் கடை உரிமையாளர் கன்னையா லால் டெலி (40) படுகொலை வழக்கில் கைதான முகம்மது ரியாஸ் அட்டாரி (38) குறித்த பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன.
ரியாஸ் அட்டாரியின் உடன் பிறந்த சகோதரரான அப்துல் அயூப் லோஹர் ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரர் ரியாஸ் குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, “என்னுடன் பிறந்த பத்து பேரில் நான் இரண்டாவது சகோதரன். 10-வதாக பிறந்தவர் ரியாஸ். எங்கள் தந்தை இறந்த பின்னர், கடந்த 2001-ல் ரியாஸ் வீட்டை விட்டுக் கிளம்பி விட்டார். சிறுவயது முதலே மதவெறியுடன் பேசும் ரியாஸை குடும்பத்தினரும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். இதனால், எங்கள் யாருடனும் அவருக்கு எந்தத் தொடர்புகள் இல்லாமல் போனது.
செவ்வாய்க்கிழமை நடந்த சம்பவத்திற்கு பின்னர்தான் அவர் உதய்பூரில் இருப்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். அங்கே அவர் யாரைத் திருமணம் செய்தார் என்பதும் எங்களுக்குத் தெரியாது.
மதத்தின் பெயரால் கொலை செய்தவருக்கு கண்டிப்பாக கடுமையானத் தண்டனை அளிக்கப்பட வேண்டும். எங்கள் உடன் பிறந்தவர் இவ்வளவுக் கொடூரமானவனாக இருப்பார் என்று நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முஸ்லிம்களின் இறைத் தூதரான முகம்மது நபியை விமர்சித்த பாஜகவைச் சேர்ந்த நுபுர் சர்மா அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் மீது பல மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது கருத்து தொடர்பாக நாட்டில் பல இடங்களில் பதற்றம் நிலவியது.
இந்தநிலையில், ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள தானிய மண்டி பகுதியில் தையல் கடை நடத்தி வந்த கன்னையா லால் என்பவர், சமூக வலைதளத்தில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவளித்து வந்தார். கடந்த ஜூன் 10-ம் நுபுரை ஆதரித்து கன்னையா முகநூலில் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
கன்னையாவின் 8 வயது மகன் விளையாட்டாக அதனைச் செய்ததாக, அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். எனினும், நுபுர் ஆதரவு பதிவுகளால் கன்னையாவிற்கு கொலை மிரட்டல்களும் வந்துள்ளன. இதனிடையில், ஜூன் 17-ம் தேதி கன்னையாவிற்கு கொலை மிரட்டல் விடுத்த முகம்மது ரியாஸ் செவ்வாய்கிழமை கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அவரும், இந்தக் கொலைக்கு உதவியாக இருந்த அவரது நண்பர் கவுஸ் முகமது (39) இருவரும் அடுத்த சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த வருடம் ரியாஸ் உதய்பூரின் ஹாத்திபுல் காவல்நிலையப் பகுதியில் சென்றபோது ஒரு உதவி ஆய்வாளர் அவரை விசாரித்துள்ளார். அப்போது அவரது கை, ரியாஸின் தாடி மீது தவறுதலாகப்பட்டுள்ளது. இதற்காக ரியாஸ், அங்கே பெரும் கூச்சலிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சில நிமிடங்களில் அங்கு பெரியக் கூட்டத்தையும் கூட்டியவர், அந்த உதவி ஆய்வாளரின் கொடும்பாவியை எரித்து ஆர்பாட்டமும் செய்துள்ளார்.
கைதானவர்களுக்கு பிரியாணி?
இதனிடையே, உதய்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதானவர்கள் இருவருக்கும் சாப்பிட பிரியாணி வழங்கப்பட்டதாக தகவல் பரவியது. வாட்ஸ் அப்பில் வைரலான இந்தத் தகவல் உண்மையில்லை என ராஜஸ்தான் போலீஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.