புதுடில்லி-பா.ஜ., ஆதரவாளரான, ராஜஸ்தானின் உதய்பூரைச் சேர்ந்த டெய்லர், கழுத்து துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணை துவங்கியது. இதில், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, உதய்பூரைச் சேர்ந்த டெய்லரான கன்னையா லால், நேற்று முன்தினம் பட்டப்பகலில் இரண்டு பேரால் கழுத்து துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். கொலையாளிகள் கொலை செய்வதை, ‘வீடியோ’வாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.முஸ்லிம் மதம் குறித்து, பா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுாபுர் சர்மா சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். அவருக்கு ஆதரவாக, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதால், கன்னையா லாலைக் கொன்றதாக வீடியோவில் கொலையாளிகள் கூறியுள்ளனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் உதய்பூரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது; பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து, உதய்பூரில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதைத் தவிர, மாநிலத்தின் 33 மாவட்டங்களிலும், ‘இன்டர்நெட்’ சேவை நிறுத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க, மாநில போலீசில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இதை பயங்கரவாத சம்பவமாக அறிவித்து, என்.ஐ.ஏ., விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது.
அதையடுத்து, இந்திய தண்டனை சட்டம் மற்றும் மிகக் கடுமையான, ‘உபா’ எனப்படும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், என்.ஐ.ஏ., வழக்குப் பதிவு செய்துள்ளது. உதய்பூர் கொலை தொடர்பாக விசாரிக்க, குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தங்களுடைய விசாரணையை துவக்கியுள்ளதாகவும் என்.ஐ.ஏ., கூறியுள்ளது.என்.ஐ.ஏ., உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் படுகொலையை நிகழ்த்தி உள்ளனர்.
இந்தக் கொலையில் ஈடுபட்ட ரியாஸ் அக்தாரி மற்றும் கவுஸ் முகமது ஆகியோரை, போலீசார் கைது செய்துள்ளனர்; மேலும், மூன்று பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.கைது செய்யப்பட்ட ரியாஸ் அக்தாரிக்கு, ஐ.எஸ்., மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில், சர்வதேச பயங்கரவாத அமைப்பு மற்றும் மற்ற நாடுகளின் தலையீடு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து விரிவாக விசாரிக்கவே, என்.ஐ.ஏ., விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.மாநிலத்தில் உள்ள சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து, உயர் அதிகாரிகளுடன் முதல்வர் அசோக் கெலாட் நேற்று ஆலோசனை நடத்தினார்.இதற்கிடையே, கொல்லப்பட்ட கன்னையா லாலின் இறுதிச் சடங்கு நேற்று உதய்பூரில் நடந்தது. இதில், பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்பட நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பா.ஜ., கடும் எதிர்ப்பு
பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ராஜ்யவர்தன் சிங் ரதோட் கூறியுள்ளதாவது:இந்தப் படுகொலை, ஒரு பயங்கரவாத செயலாகும். ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு ஆதரவாக மாநில அரசு செயல்படுவதே இதற்கு முக்கிய காரணமாகும். ராஜஸ்தானில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே, இது போன்ற வன்முறையில் ஈடுபடுகின்றனர்.மத ரீதியிலான பதற்றம் ஏற்பட்டுள்ளதால், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். மாநிலத்தில் மத ரீதியிலான மோதல்களை உருவாக்கும் வகையில் அவர் செயல்பட்டு வருகிறார். கட்சி மற்றும் ஆட்சியில் தனக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதால், ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு ஆதரவாக இருந்து, அவர்களை துாண்டி விட்டு வருகிறார். முதலில் அவர் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பயங்கரவாத செயல்: முதல்வர்
உதய்பூர் சம்பவம் குறித்து, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேற்று கூறியுள்ளதாவது:மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இது ஒரு பயங்கரவாத செயல். கைது செய்யப்பட்டுள்ளோர் மீது, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.என்.ஐ.ஏ., விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு, மாநில போலீஸ் முழு ஒத்துழைப்பை வழங்கும். சட்டம் – ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்துவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முஸ்லிம் அமைப்புகள் கண்டனம்
உதய்பூர் டெய்லர் தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜமாயத் உலேமா – இ – ஹிந்த், டில்லி ஜமா மஸ்ஜித் இமாம் உள்ளிட்ட அமைப்புகள், பிரமுகர்கள் கூறியுள்ளதாவது:அமைதியை போதிப்பது இஸ்லாம். மற்ற மதத்தின் தலைவர்களை இழிவுபடுத்துவது குற்றமாகும். பா.ஜ.,வைச் சேர்ந்த நுாபுர் சர்மா, முஸ்லிம் மதம் குறித்து பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பா.ஜ., நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்நிலையில், யாரும் சட்டத்தை கையில் எடுத்து செயல்படக் கூடாது. கொலை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதை இஸ்லாம் ஏற்காது. இது கண்டிக்கத்தக்கது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
கொலை மிரட்டல்
முஸ்லிம் மதம் குறித்து அவதுாறாக கருத்து தெரிவித்த நுாபுர் சர்மா, கட்சியில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். அவருடைய கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக, மற்றொரு செய்தித் தொடர்பாளர் நவீன் குமார் ஜிண்டால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், உதய்பூர் டெய்லர் கொலையைத் தொடர்ந்து, தனக்கும் கொலை மிரட்டல் வருவதாக நவீன் குமார் ஜிண்டால், போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
முஸ்லிம் மதம் குறித்து அவதுாறாக கருத்து தெரிவித்த நுாபுர் சர்மா, கட்சியில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். அவருடைய கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக, மற்றொரு செய்தித் தொடர்பாளர் நவீன் குமார் ஜிண்டால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், உதய்பூர் டெய்லர் கொலையைத் தொடர்ந்து, தனக்கும் கொலை மிரட்டல் வருவதாக நவீன் குமார் ஜிண்டால், போலீசில் புகார் கொடுத்துள்ளார்.