ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் டெய்லர் கன்ஹையா லால் என்பவரை, கவுஸ் முகமது, ரியாஸ் முகமது ஆகிய இளைஞர்கள் இருவர் நேற்று தலை துண்டித்துக் கொலைசெய்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நேற்றிரவே போலீஸார் கொலையாளர்களை கைதுசெய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தேசிய முகாமைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஏற்கெனவே நபிகள் நாயகம் விவகாரத்தில் நுபுர் ஷர்மாவின் கருத்து தொடர்பாக இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசியிருந்த நெதர்லாந்து எம்.பி கீர்ட் வில்டர்ஸ், தற்போது உதய்பூர் படுகொலை குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக கீர்ட் வில்டர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “நுபுர் ஷர்மாவை ஆதரித்ததற்காக ஒரு அப்பாவி மனிதனைக் கொலைசெய்திருக்கிறார்கள். இஸ்லாமிய பயங்கரவாதிகள் அவர்களின் சித்தாந்தத்தைப் போலவே வன்முறை மற்றும் சகிப்புத்தன்மையற்றவர்கள். இதற்கு ஒரே விடை என்னவெனில், நாம் அனைவரும் ஒன்றாக நுபுர் ஷர்மாவை ஆதரிப்போம் எனக் கூறுவோம். ஏனெனில் அவர்களால் நம் அனைவரையும் கொல்ல முடியாது.
இந்தியாவில் இந்துக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இது அவர்களின் தாய்நாடு. இஸ்லாமிய நாடல்ல இந்தியா” எனப் பதிவிட்டிருந்தார்.
மேலும் மற்றொரு பதிவில் இந்தியாவைக் குறிப்பிட்டு, “ஒரு நண்பராக நான் உங்களுக்குச் சொல்கிறேன். சகிப்புத்தன்மையற்றவர்களிடம் சகிப்புத்தன்மையுடன் இருப்பதை நிறுத்துங்கள். தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் ஜிஹாதிகளுக்கு எதிராக இந்து மதத்தை பாதுகாத்திடுங்கள். இஸ்லாத்தைத் திருப்திப்படுத்தாதீர்கள், ஏனெனில் அதனால் நீங்கள் அதிக விலைக்கொடுக்க நேரும்” என கீர்ட் வில்டர்ஸ் கூறியிருந்தார்.