உதய்பூர் படுகொலை | பதற்றம், கடைகள் அடைப்பு – அமைதி காக்க ராஜஸ்தான் முதல்வர் வேண்டுகோள்

உதய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்டவர் படுகொலை செய்யப்பட்டார். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரிலுள்ள மால்தாஸ் பகுதியில் கன்னையா லால் என்பவர் தையல் கடை நடத்தி வந்தார்.

அவரது கடையில் நேற்று அத்துமீறி புகுந்த 2 பேர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கன்னையா லாலை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பொது இடத்தில் வைத்து அவரது தலையை துண்டித்தனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டனர். மேலும் பிரதமர் மோடிக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

போலீஸார் விசாரணையில், முஸ்லிம்களின் இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து தவறாக கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டதால் கன்னையா லால் படுகொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான செய்தி பரவியதால் உதய்பூரில் கடைகள் அடைக்கப்பட்டன. அங்கு பதற்றம் நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

கன்னையா லாலை படுகொலை செய்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ரியாஸ் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு நபர் கவுஸ் முகமது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து இரண்டு ஏடிஜிபிகள் தலைமையிலான போலீஸ் படையினர் அங்கு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நகர் முழுவதும் சுமார் 1,000 பேர் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாதவண்ணம் அப்பகுதியில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “உதய்பூரில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இது ஒரு சோகமான சம்பவம். தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். அதுவரை மாநில மக்கள் அமைதி காக்க வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.