தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் முகமது நபிகள் குறித்து அண்மையில், பா.ஜ.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரைச் சேர்ந்த கன்ஹையா லால் என்ற தையல்காரர் ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, நேற்றைய தினம் கன்ஹையா லாலின் கடைக்குச் சென்ற இருவர்… அவரின் தலையைத் துண்டித்துக் கொலைசெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தால் ராஜஸ்தானில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இந்த நிலையில், பா.ஜ.க பிரமுகர்கள் கன்ஹையா லால் கொலை தொடர்பாக காங்கிரஸை விமசித்துவருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் சி.டி ரவி, “2020-ல் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் இல்லத்துக்குச் சென்றது போல… செவ்வாய்க்கிழமை மாலை உதய்பூரில் தலை துண்டிக்கப்பட்ட தையல்காரர் கன்ஹையா லால் சாஹுவின் இல்லத்துக்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் செல்வார்களா? ‘நிகம்மா’ (பயனற்ற) முதல்வர் அசோக் கெலாட்டை எதிர்த்துப் போராட்டம் நடத்துவீர்களா? ஒரு இந்துவை இரண்டு முஸ்லிம்கள் கொடூரமாகக் கொன்றதற்காக அவர் ராஜினாமா செய்யக் கோருவார்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.
அதே போல பா.ஜ.க மக்களவை உறுப்பினர் பி.சி.மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் அரசு இயந்திரம் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. அசோக் கெலாட் ஆட்சிசெய்யும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார். அவர் ராஜினாமா செய்ய வேண்டும்” எனப் பதிவிட்டிருக்கிறார்.