புதுடெல்லி: உதய்ப்பூரில் தையல்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிடிபட்ட குற்றவாளிகளுக்கு பாகிஸ்தான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
முகம்மது நபியை விமர்சித்த நுபுர் சர்மா, பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவு தெரிவித்து ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் தையல் கடை வைத்திருந்த கன்னையா லால் டெலி (40) என்பவர், கடந்த 10-ம் தேதி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தார். அதைக் கண்டித்து 3 முஸ்லிம் அமைப்புகள், கன்னையா மீது புகார் அளித்திருந்தன. அதன்பேரில் தானியமண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பன்வர்லால் விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னையா, சில தினங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். தான் வசிக்கும் பகுதியில் உள்ள முஸ்லிம்களிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாக போலீஸில் கன்னையா புகார் அளித்திருந்தார்.
அதில், ‘எனது 8 வயது மகன் என் கைபேசியில் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறுதலாக பதிவிட்டார். இதைப் பார்த்து எனது கடைக்கு வந்த இருவர் என்னை மிரட்டினர். அதன்பின் அந்த பதிவுகள் நீக்கப்பட்டன’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இரு தரப்பினரையும் அழைத்த உதவி ஆய்வாளர் பன்வர்லால், சமாதானம் பேசி அனுப்பியுள்ளார். பிரச்சினை முடிந்துவிட்டதாக நினைத்த கன்னையா, மூடி வைத்திருந்த தையல் கடையை நேற்று முன்தினம் திறந்துள்ளார். அன்று பகலில் அவரது கடைக்குள் புகுந்த 2 பேர், கத்தியால் கன்னையாவின் தலையை துண்டித்து கொலை செய்தனர். அதை வீடியோ பதிவாக்கி பகிரங்கமாக வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே, கன்னையாவை கொலை செய்துவிட்டு தப்பிய முகம்மது ரியாஸ் அக்தரி (38), கவுஸ் முகம்மது (39) ஆகிய இருவரையும் அடுத்த சில மணி நேரங்களில் போலீஸார் கைது செய்தனர்.
கன்னையாவை கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்து, அந்த வீடியோவை ரியாஸ் அக்தரி வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியும் ராஜஸ்தான் போலீஸார் அலட்சியமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட போலீஸாரிடம் விசாரணை நடத்த ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. உதவி ஆய்வாளர் பன்வர்லால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிடிபட்ட கொலையாளிகளுக்கு பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ‘தாவத்-எ-இஸ்லாமி’ மற்றும் சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்-யுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ரியாஸ் அக்தரி, சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு சென்று வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கன்னையா கொலை வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. என்ஐஏ அதிகாரிகள் உதய்ப்பூருக்கு வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அமைச்சர் கண்டனம்
மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:
உதய்ப்பூரில் நடந்த கொலை தலிபான்களின் காட்டுமிராண்டித்தனமான செயல் போன்றது. இதில் ஈடுபட்டவர்கள் இஸ்லாத்துக்கும் மனித குலத்துக்கும் மிகப்பெரிய எதிரிகள். இந்தியாவின் ஒற்றுமை பலத்தை சீர்குலைக்க நினைக்கும் இதுபோன்ற தீயசக்திகள் விஷயத்தில் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதுபோன்ற தீயசக்திகளை முறியடிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் நக்வி கூறினார்.