உயர் போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஜி.பி. பிரவீன் சூட் ஆலோசனை

பெங்களூரு:

போலீஸ் டி.ஜி.பி. ஆலோசனை

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக பெங்களூருவில் நடந்து வரும் சாலை அமைத்தல், மெட்ரோ ரெயில் பாதை உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் காரணமாக நகரின் முக்கிய ஜங்ஷன்களில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து 2 நாட்களுக்கு முன்பு, போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தி இருந்தார்.

அப்போது பெங்களூருவில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு, அவர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த நிலையில், பெங்களூரு நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை சரி செய்வது குறித்து மாநில போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் வைத்து, உயர் போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஜி.பி. பிரவீன் சூட் நேற்று ஆலோசனை நடத்தினார்.

நேரில் சென்று ஆய்வு நடத்த…

இந்த ஆலோசனை கூட்டத்தில் பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி, போக்குவரத்து இணை கமிஷனர் ரவிகாந்தேகவுடா, போக்குவரத்து துணை கமிஷனர்களான குல்தீப்குமார் ஜெயின், கலா கிருஷ்ணமூர்த்தி, சவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நகரில் எந்ததெந்த சாலைகளில் எல்லாம் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைகள் ஏற்படுகிறதோ?, அங்கு உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும், அங்கு நிலவும் பிரச்சினைகளை உடனடியாக சரி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அறிவுறுத்தல்

நெரிசல் பிரச்சினைகளை சரி செய்ய முக்கியத்துவம் கொடுக்கும்படியும், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க தேவையான ஏற்பாடுகளை செய்யும்படியும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு, மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையில், பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது குறித்து அதிகாரிகளுடன், போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டியும் ஆலோசனை நடத்தி, சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.