இலங்கையில் வாழும் எங்கள் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும்போது எடுத்துச் செல்ல அவர்களுக்கு உணவில்லை என்பதை அறிந்து சொல்லொணாத்துயரில் ஆழ்ந்திருக்கிறோம் என்கிறார் பிரித்தானியாவில் வாழும் இலங்கையர் ஒருவர்.
21 ஆண்டுகளுக்கு முன் இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தவர் Mohamed Ismail Abdul Manaff (49).
Ismailஉடன் பிறந்தவர்கள் ஏழு பேர். அவர் மட்டுமே பிரித்தானியா வந்து இங்கிலாந்திலுள்ள Leicesterஇல் குடியமர்ந்துவிட, அவரது சகோதர சகோதரிகள் இன்னமும் குடும்பத்துடன் இலங்கையில்தான் வாழ்ந்துவருகிறார்கள்.
இந்நிலையில், தற்போது அவர்கள் மருந்து, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்குக் கூட பற்றாக்குறையுடன் வாழ்ந்து வருவதை அறிந்து வேதனையில் தவிக்கிறார் Ismail.
இலங்கையில் வாழும் எங்கள் குடும்பத்தில் எல்லோருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும், பிள்ளைகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை எங்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது என்கிறார் Ismail.
அவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது மதிய உணவுக்காக எடுத்துச் செல்ல அவர்களுக்கு உணவு இல்லை என்று கூறும் Ismail, என் சகோதர சகோதரிகளின் பிள்ளைகள் சிலருக்கு இப்போது தேர்வுகள் நடைபெறுகின்றன. ஆனால், உணவு இல்லாமல், வெறும் வயிற்றுடன் அவர்கள் தேர்வுகளுக்கு செல்கிறார்கள் என்பதைக் கேட்க கஷ்டமாக இருக்கிறது என்கிறார்…
1999 முதல் Leicesterஇல் வாழ்ந்துவரும் Mohamed Ahmed(43), நான் இலங்கையில் வாழ்ந்த நாட்களில் இலங்கை அப்போதுதான் வளர்ச்சியடைந்துகொண்டிருந்தது. ஆனாலும் அப்போது உணவுப்பற்றாக்குறையோ எரிபொருள் பற்றாக்குறையோ இருந்ததில்லை, நாங்கள் அப்போது கூட நல்ல வாழ்க்கை வாழ்ந்தோம். சொல்லப்போனால் யுத்தம் நடந்த காலகட்டத்தில்கூட எங்களுக்கு உணவுப்பற்றாக்குறை ஏற்படவில்லை. ஆனால் எனது 43 வருட வாழ்க்கையில் முதன்முறையாக இலங்கையில் இவ்வளவு மோசமான சூழலை இப்போதுதான் பார்க்கிறேன் என்கிறார்.
அதே நேரத்தில், இப்போது இலங்கையைப் போலவே இங்கிலாந்திலும் விலைவாசி பிரச்சினை இருக்கிறது என்று கூறும் Ahmed, இலங்கையிலிருக்கும் எங்கள் குடும்பம் எங்களை நம்பியிருக்கிறது, ஆனால், நாங்களும் இங்கு கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம் என்கிறார்.
Leicesterஇல் ஏராளம் இலங்கையர்கள் வாழ்கிறார்கள் என்று கூறும் Ahmed, நாங்கள் இந்நகரின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் மூலமாக அதிக அளவில் எங்கள் பங்களிப்பைச் செய்கிறோம். ஆகவே, நகர கவுன்சில் எங்களுடன் இணைந்து இலங்கையில் வாழும் எங்கள் மக்களுக்கு உதவவேண்டும் என கோரிக்கை வைக்கிறார்.