சென்னை: தமிழகத்தில் எதிர்க்கட்சியை குற்றம்சாட்டி, அகில இந்திய அரசியலுக்கு தாவ திமுக முயற்சிக்கிறது என, மதுரையில் தமாகா தலைவர் ஜிகே.வாசன் கூறினார்.
மதுரை மாநகர தமாகா தலைவராக இருந்த சேது ராமன் சமீபத்தில் உயிரிழந்தார். அவருக்கு பதிலாக புதிய மாநகர தலைவராக ராஜாங்கம் நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து காமராசர் சாலையில் செயல்பட்ட தமாகா மாநகர மாவட்ட அலுவலகம் பைபாஸ் ரோடு குரு தியேட்டர் அருகே மாற்றப் பட்டது. இந்த அலுவலகத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று திறந்தார்.
இதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”அரசியலுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது மதுரை மாநகரம். இந்த கட்சி அலுவலகம் மூலம் மாநகரத்தில் நாங்கள் வலுப்பெறும். காமராஜர் பிறந்தநாளையொட்டி ஜூலை 17-ல் மதுரை பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். மதுரை உட்பட தென்மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கின்றனர். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் ஒதுபோதும் தலையிடமாட்டோம். அது முறையுமல்ல. அதிமுக பலமான கட்சி. மேலும், வளரவேண்டும்.
அக்கட்சியை பாஜக பிரித்தாள முயற்சிக்கிறது என்பதெல்லாம் ஆளுங்கட்சி, எதிர்கட்சிகள் பயத்தில் கூறுவது. மக்களின் எண்ணங்களை பாஜக பிரதிபலித்து சிறப்பாக செயல்படுகிறது. எம்பி தேர்தலுக்கான பணியை தற்போது முதலே தொடங்குகிறேம். ஒரே நாடு, தேர்தல் என்பது முறையான அறிவிப்பு வந்தால் மட்டுமே நம்ப முடியும்.
தமிழகத்தில் அதிமுகவே வலுவான எதிர்க்கட்சி. அதிமுக, பாஜகவிற்குள் கோபம், தாபமில்லை. ஒவ்வொரு கட்சியும் தனது பலத்தை நிரூபிக்க முயற்சிப்பர். திமுகவின் ஓராண்டு ஆட்சியில் மக்கள் ஏமாந்துள்ளனர். முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டி, அகில இந்திய அரசியலுக்கு திமுக முயற்சிக்கிறது. பிரச்சினைகளை திசை திருப்புகிறது. பெண்களுக்கு ரூ.1000 வழங்குவதாக வாக்குறுதி அளித்த திமுக, தற்போது நிதியை காரணம் காட்டுகிறது. இது போன்ற பல்வேறு பிரச்சினைகளை ஆளுங்கட்சிக்கு எதிராக அடுக்கலாம். பாஜக பற்றிய பேசும் திமுக, காங்கிரஸ் தவறுகளை சுட்டிக்காட்டுவதில்லை.
சொத்துவரி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற மக்கள் பிரச்சினைகளுக்கு நாங்கள் தொடர்ந்து குரல் கொடுக்கிறோம். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். கொலை, கொள்ளை, திருட்டு, கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. கஞ்சா புழக்கத்தை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடுக்க, அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிடவேண்டும். பாலியல் குற்றங்களுக்கு உடனடி தண்டனை வழங்கவேண்டும்.
இக்குற்றங்களை விசாரிக்க அனைத்து மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்தவேண்டும். பாலியல் குற்றச்செயல் புரிவோருக்கு தூக்குத் தண்டனை வழங்கலாம். தமாகா இளைஞரணி சார்பில், ஜூலை 1ல் சென்னையில் நீட் தேர்வெழுதும் 200 மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்படும். அடுத்து தருமபுரி தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகம் வழங்கப்படும். இது போன்ற மாணவர்கள் சிறந்த பேராசிரியர்களுடன் கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் எம்பி.,க்கள், என்எஸ்வி. சித்தன், உடையப்பன், முன்னாள் எம்எல்ஏ கேஎஸ்கே. ராஜேந்திரன், மாநகர தலைவர் ராஜாங்கம், மாநில தொண்டரணி அமைப்பாளர் அயோத்தி, மகளிரணி நிர்வாகி ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.