தங்கள் தந்தைக்கு தினமும் மிரட்டல் அழைப்புகள் வந்ததாகவும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உதய்பூரில் கொலை செய்யப்பட்ட கன்னையால் லால் மகன்கள் தெரிவித்துள்ளார்.
நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதால், உதய்பூரில் தையல்காரர் கன்னையா லால் இருவரால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். தனக்கு வரும் மிரட்டல் அழைப்புகள் குறித்து, தங்கள் தந்தை போலீசில் புகார் அளித்தும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவரது மகன்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
“சமூக வலைதளங்களில் எனது தந்தை தவறுதலாக ஆட்சேபனைக்குரிய கருத்தை பதிவிட்டு, கைது செய்யப்பட்டு ஜாமீன் பெற்றார். சமரச சந்திப்பின் போது காவல்நிலையத்தில் மன்னிப்பும் கேட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து மிரட்டல் அழைப்புகள் வந்துகொண்டிருந்தன. அதற்காக பலமுறை காவல்துறையை அணுகியுள்ளார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், எங்கள் தந்தை இன்று உயிருடன் இருந்திருப்பார்,” என்று கன்னையா லாலின் மகன்கள் யாஷ் மற்றும் தருண் ஆகியோர் கூறினர்.
“மிரட்டல் அழைப்புகள் காரணமாக தங்கள் தந்தை ஐந்து முதல் ஆறு நாட்கள் கடையை மூடிவிட்டார். ஒருவர் கடைக்கு வந்து தங்கள் தந்தையை மிரட்டினார். நான் பி.ஏ பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் நிலையில், சகோதரர் தருண் முதலாம் ஆண்டு மருந்தக மாணவராக இருக்கிறார். குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே உறுப்பினர் தந்தை மட்டுமே. அவரும் தற்போது இல்லை” என்று வேதனையுடன் கூறினார் யாஷ். பாதிக்கப்பட்டவரின் மகன்கள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோரினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM