புதுடெல்லி: ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவி காலம் இன்றோடு முடிந்த நிலையில், ஒன்றிய அரசின் வேண்டுகோளை ஏற்று 3 மாதங்கள் மட்டுமே பதவியில் நீடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். நீதிமன்ற வழக்கு விவகாரத்தில் ஒன்றிய அரசு தரப்பில் ஆஜராகும் அதிகாரம் கொண்டவர் தான் தலைமை வழக்கறிஞர் ஆவார். குறிப்பாக ஜனாதிபதியின் சார்பாகவே நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்கும் அளவிற்கு உட்சபட்ச அதிகாரம் கொண்டது இந்த பதவியாகும். இந்த நிலையில், முன்னதாக ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த முகுல் ரோத்தகி கடந்த 2017ம் ஆண்டு தனது சொந்த காரணங்களுக்காக விலகியதை தொடர்ந்து, மூத்த வழக்கறிஞராக இருந்த கே.கே.வேணுகோபாலை அதே ஆண்டு ஜூலை 1ம் தேதி தலைமை வழக்கறிஞராக ஒன்றிய அரசு நியமித்தது. இதில் அவருடைய மூன்று ஆண்டு பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தோடு முடிந்த நிலையில் அது இந்த ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டு வரையில் நீட்டிக்க ஒன்றிய அரசு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், தனிப்பட்ட காரணங்கள் காரணமாக, இந்த பதவி நீட்டிப்பை ஏற்க வேணுகோபால் மறுத்து விட்டார். இதனால், ஒன்றிய அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று, புதிய தலைமை வழக்கறிஞரை நியமிக்கும் வரையில் 3 மாதங்களுக்கு மட்டுமே இப்பதவியில் நீடிக்க அவர் ஒப்புக் கொண்டுள்ளார். தற்போது, நாட்டின் 15வது தலைமை வழக்கறிஞராக கே.கே.வேணுகோபால் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.