அதிமுகவில கடந்த 2 வாரங்களாக ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருந்து வரும் நிலையில், கட்சியில் ஒற்றை தலைமை என்பதை தவிர்க்க வேண்டும். அப்படியே ஒற்றை தலைமை அவசியம் என்றால் அதில் ஒபிஎஸ்தான் தலைமை ஏற்க வேண்டும் என்று ஜூனியர் எம்.ஜி.ஆர். என அழைக்கப்படும் எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் அடுத்து வரும் ஜூலை 11-ந் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதோடு மட்டுமல்லாமல் கட்சியில் இருந்து ஒ.பன்னீர்செல்வத்தை ஓரம்கட்டும் முடிவில் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருவதாகவும், கூப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிமுக ஐடி விங் ஒஃபன்னீர்செல்வத்திற்கு வெளிப்படையான எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும் தனது ஒருங்கிணைப்பாளர் பதவியை சாதுர்யமாக பயன்படுத்தும் ஒ.பி.எஸ் பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனால் அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து தொண்டர்கள் மட்டுமல்லாது பல தமிழக அரசியல் கட்சிகள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில், அதிமுகவில் ஒபிஎஸ் தான் தலைமை ஏற்க வேண்டும் என்று ஜூனியர் எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்படும் அவரது பேரன் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் கூறுகையில்.
அதிமுக கட்சி ‘புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களால் காக்கப்பட்டது. அவர் இருக்கும் காலத்திலேயே ஓபிஎஸ் ஐ நம்பி கட்சிப் பொறுப்பை கொடுத்தார். எம்ஜிஆர் தொண்டர்களால் தேர்வு செய்யபடுபவர்களையே அதிமுக கட்சி ஏற்றுக்கொள்ளும். இருவரும் கையெழுத்து போட்டால் தான் கட்சியில் எந்த முடிவையும் எடுக்க முடியும். ஆனால் தற்போது ஒற்றைத் தலைமை ஏன் என தெரியவில்லை. அப்படியே ஒற்றை தலைமை என்றாலும், சீனியர் ஓ.பி.எஸ் அவரை தான் தலைமையாய் ஏற்க வேண்டும் அதற்கு இ.பி.எஸ் தான் விட்டுக் கொடுக்கணும்.
ஆனாலும் இரட்டை தலைமை இருந்தால் கட்சி இன்னும் பலமாக இருக்கும். இப்போ கட்சியும், சின்னமும் ஓபிஎஸ் இடம் தான் உள்ளது. இரண்டு பேரும் சேர்ந்து தலைமை வகித்தால் கட்சி.மிகப் பெரிய சக்தி வாய்ந்த கட்சியாக அசைக்க முடியாதபடி வளரும். எனவே ஒற்றை தலைமை தவிர்க்க வேண்டும். அதேபோல் ஓ.பி.எஸ் விட்டு கொடுத்ததால் தான் இ.பி.எஸ் எதிர்க்கட்சித் தலைவரானார்.
அடுத்த பொதுக்குழு நீதிமன்ற உத்தரவுபடி நடக்காது. தொண்டர்கள்தான் அதிமுகவில் தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ஓ.பி.எஸ்.ஐ கட்சியை விட்டு நீக்க முடியாது. ஆனால் அவர் நினைத்தால் இ.பி.எஸ்.ஐ நீக்கமுடியும். மேலும் பொதுக்குழுவில் ஓ.பி.எஸ்.ஐ அவமானப்படுத்தியது அராஜக செயல். மேடையில் வளர்மதி எம்.ஜி.ஆர் பாட்டை பொதுக்குழுவில் தப்பாக பாடுகிறார். என்று கூறிய அவர், எடப்பாடியார் அடுத்த எம்ஜிஆர் இல்லை. எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது அவர் கடவுள் போன்றவர் ஒரே எம்ஜிஆர் தான் என கூறியுள்ளார்.