மும்பை: மும்பை கடல் பகுதியில் இருந்து 50 நாட்டிகல் மைல் தொலைவில் அமைந்துள்ள ஓன்ஜிசி நிறுவனத்தின் சாகர் கிரண் என்ற எண்ணெய் கிணறு பகுதிக்கு, ஓஎன்ஜிசி நிறுவன ஊழியர்கள் 7 பேர், பவன் ஹன்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டரில் சென்றனர். அதில் பைலட் இருவரையும் சேர்த்து 9 பேர் பயணம் செய்தனர். எண்ணெய் கிணறு பகுதிக்கு அருகே ஹெலிகாப்டர் சென்றபோது, திடீரென கோளாறு ஏற்பட்டது. அதனால் ஹெலிகாப்டரை பைலட் அவசரமாக எண்ணெய் கிணறு பகுதியில் தரையிறக்க முயன்றார். ஆனால் அதற்குள் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து அரபிக் கடலில் விழுந்து, மிதவை உபகரண உதவியால் மிதந்தது.
இதையடுந்து கடற்படை ஹெலிகாப்டர் சம்பவ இடத்துக்கு விரைந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்களை மீட்டு பவான் ஹன்ஸ் விமான தளத்துக்கு கொண்டு சென்றது. கடலில் விழுந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் 4 பேர் இறந்த நிலையில் கொண்டுவரப்பட்டதாக மும்பை நானாவதி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதில் 3 பேர் ஓன்ஜிசி நிறுவன ஊழியர்கள். ஒருவர் ஒப்பந்த ஊழியர். 2 பைலட்டுகள் உட்பட மற்ற 5 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.