தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமைக்கான விவகாரம் உச்சத்தை எட்டியிருக்கிறது.
சென்னை வானகரத்தில் கடந்த 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்படுவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, அதிமுக பொதுக்குழுக் கூட்ட மேடையிலிருந்து ஓபிஎஸ், அவரின் ஆதரவாளர்கள் பாதியில் வெளியேறினர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம், “சட்டத்துக்குப் புறம்பான முறையில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. புதிய பொதுக்குழுத் தேதி அறிவிக்கப்பட்டது செல்லாது” என்றார்.
இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்குப் பல்வேறு ஆதாரங்களுடன் மிக நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடித்ததில் “ஜூலை 11-ம் தேதி அன்று நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என முடிவெடுத்திருப்பது சட்ட விதிகளுக்குப் புறம்பானது. மேலும் அதிமுக பொருளாளர் என்கிற அடிப்படையில் கட்சியின் வரவு செலவு கணக்குகளை கடந்த பொதுக்குழு கூட்டத்தில் தாக்கல் செய்ய என்னை அனுமதிக்கவில்லை. 14-6-2002 முதல் தற்போது வரை அதிமுக-வில் நடந்த சட்ட விதிமீறல் சம்பவங்களை தேர்தல் ஆணையத்தின் முன் சமர்ப்பிக்கிறேன்” என பல்வேறு விவரங்களை தெரிவித்திருந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து முறையீடு செய்த நிலையில், எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த மனுவில், “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை. பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை கொண்டு வருமாறு வலியுறுத்தி வருகின்றனர். ஓ.பி.எஸ் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார்” என கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.