சென்னை: கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடந்து வருகிறது. மாறு வேடத்தில் ஆயுதங்களுடன் நுழைய முயன்ற போலீஸார் பிடிபட்டனர்.
2008-ல் கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில், 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதுபோல மீண்டும் ஒரு தாக்குதல் நடந்துவிடக் கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் உறுதியாக உள்ளன. நாட்டின் கடல் எல்லைகளில் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, அனைத்து மாநிலங்களிலும் அவ்வப்போது பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
கடல் வழியாக தமிழகத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவினால், அதை தடுப்பது குறித்து 6 மாதங்களுக்கு ஒருமுறை தீவிரவாத தடுப்பு ஒத்திகை (‘ஆபரேஷன் சாகர் கவச்’) நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய ஒத்திகை இன்று மாலை 6 மணி வரை நடத்தப்படுகிறது.
திட்டமிட்டபடி, தமிழகம் முழுவதும் கடற்படை, கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழும போலீஸார், கியூ பிரிவு, மத்திய தொழில் பாதுகாப்பு படை, சட்டம் – ஒழுங்கு போலீஸார் உள்ளிட்ட பல்வேறு பிரிவு போலீஸாரும் இணைந்து நேற்று காலை பாதுகாப்பு ஒத்திகையை தொடங்கினர். சென்னையில் உள்ள கடல் பகுதிகளில் படகு மூலம் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, தீவிரவாதிகள் போல படகுகளில் ஆயுதங்களுடன் நுழைய முயன்ற 4 பேரை போலீஸார் சுற்றி வளைத்தனர். இதேபோல, வாகன சோதனையின்போது ஆட்டோவில் 2 பேர் பிடிபட்டனர். ரயில் நிலையங்கள், வணிக வளாகங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. வாகன தணிக்கையும் தீவிரமாக நடந்தன.
கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிவிரைவு படகுகளில் போலீஸார் ரோந்து சென்று, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் தொடங்கி புதுச்சேரி வரை உள்ள கடலோரப் பகுதிகளில் தொலைநோக்கி மூலம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேசுவரம் கடற்பகுதியில் நடந்த ஒத்திகையின்போது 2 படகுகளில் ஊடுருவ முயன்ற 8 பேரை கடலோர போலீஸார் மடக்கிப் பிடித்தனர். நாகை பகுதியில் இருந்து பேருந்து மூலம் காரைக்கால் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 5 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து திருமலைராயன்பட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடியில் இருந்து அரசங்கரை வரை சோதனை நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் காட்டுப்பள்ளி தனியார் கப்பல் கட்டும் தளம், வட சென்னை அனல் மின்நிலையம் அருகே தீவிரவாதிகள் போல கடல் வழியாக ஊடுருவ முயன்ற 10 பேரை போலீஸார் பிடித்தனர். இன்று மாலை 6 மணியுடன் பாதுகாப்பு ஒத்திகை முடிகிறது.