புதுடெல்லி: நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் பலவகையானப் பண்டிகைகள் மற்றும் யாத்திரைகள் தொடங்கவுள்ள நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோவிட்-19 தொற்று கணிசமான அளவு குறைந்திருந்தது. தற்போது ஒருசில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வரும் மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விழாக்களும், யாத்திரைகளும் நடைபெறுவதால், அவற்றில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதனால் கோவிட்-19 உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவக்கூடும். எனவே கோவிட்-19 தடுப்புக்கு தேவையான நடவடிக்கைகள், பரிசோதனை, நோய் கண்டறிதல், தடுப்பூசியில் கவனம் செலுத்துதல் அவசியம்.
கோவிட்-19 பரவல் அதிகரிக்காமல் குறைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் கூட்டாக இதுவரை எடுத்த நடவடிக்கைகள், உரிய நேரத்தில் மேற்கொண்ட பொது சுகாதார நடவடிக்கைகளால் ஏற்பட்ட பயன்களை நாம் இழந்துவிடாமல் இருப்பது முக்கியமானதாகும். எனவே விழாக்கள் மற்றும் யாத்திரைகளில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரளும் போது மாநில மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் கீழ்காணும் பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியமாகும்.
- கோவிட்-19-க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியத்தை விரிவாக பிரச்சாரம் செய்ய வேண்டும்.
- தேவைபட்டால் ஒரு சில வாரங்களுக்கு முன்பே முகாம்களை நடத்தி தொடக்க நிலை தடுப்பூசி மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுகாதார பணியாளர்கள், முன்களப்பயணியாளர்கள், தொண்டர்கள் ஆகியோர் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருப்பது நல்லது. இணைநோய் உள்ளவர்களும், மூத்த குடிமக்களும் கூடுதலாக முன்னெச்சரிக்கை தடுப்பூசி டோஸ்களை செலுத்திக்கொள்வது அவசியம்.
- பொதுக் கூட்டங்கள், வழிபாடுகள் மற்றும் தங்குமிட ஏற்பாடுகளை நல்ல காற்றோட்டம் உள்ள பகுதிகளில் செய்வதோடு, உடல் வெப்பம் அறிதல், கை கழுவுதல் ஆகியவற்றையும் வலியுறுத்த வேண்டும்.
- நோய் கண்காணிப்பு முறையை வலுப்படுத்துவதற்கான ஆய்வை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும் மாநில, மாவட்ட சுகாதார நிர்வாகம் கோவிட்-19 தொற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களை நெருக்கமாக கண்காணித்து, தனிமைப்படுத்த வேண்டும்.
- மனித ஆற்றல், மருந்துகள், ஆக்சிஜன், மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட மருத்துவ வசதிகளையும், படுக்கை எண்ணிக்கையை அதிகப்படுத்துதல், பற்றியும் மாநில அரசு ஆய்வு செய்ய வேண்டும்.
இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமே கோவிட்-19 தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தியதால் பெற்ற பயனை தொடர முடியும்’ என்று ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.