சென்னை: மாவட்ட ஆட்சியர்கள் கரோனோ வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கரோனோ பரவல் அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் மாவட்ட நிர்வாகங்களுக்கு கரோனோ வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ” உருமாறிய BA.5 மற்றும் BA2.38 என்ற ஓமிக்ரான் வகை பாதிப்புகள் பெருமளவில் பரவி வருகிறது. இதன் காரணமாக நோய் பாதிப்புகள் அதிகரிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். சமீபத்திய ஆய்வில் 26 % சந்தை , பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் பொது இடங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாததால் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது. 18 % பணிபுரியும் இடங்களிலும் , 16 % பயணத்திலும், 12 % கல்வி நிலையங்கள் வாயிலாகவும் கரோனோ தொற்றுக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுகிறார்களா என்பது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அலுவலகத்திற்கு வரக்கூடிய அனைவருக்கும் தெர்மல் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்
வெப்பநிலை அதிகம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்த வேண்டும். முகக் கவசம் அணிதல் கைகழுவுதல் , தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகியவற்றை அனைவரும் முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் மாவட்ட நிர்வாகங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுளளது.