க. சண்முகவடிவேல், திருச்சி
திருச்சி காந்திமார்க்கெட்டில் உள்ள வாழைக்காய் மண்டியில் இன்று திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு தலைமையில் அதிகாரிகள், தொலைபேசி வாயிலாக வந்த புகாரின் பேரில் சில கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஸ்டாலின், பாண்டியன், வசந்தன், இப்ராகீம், வடிவேல் ஆகியோர் நடத்திய இந்த சோதனையின்போது ரசாயனம் தெளிக்கப்பட்ட 640 கிலோ வாழைக்காய்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், ரசாயன மருந்துகள் அவற்றை தெளிப்பதற்காக வைத்திருந்த ஸ்பிரேயர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
வாழைக்காய் வியாபாரிகள் இயற்கையான முறையில் வாழைத்தார்களை பழுக்க வைக்கவேண்டும், மீறி ரசாயன கலவை தெளித்தால் அவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இன்று பறிமுதல் செய்யப்பட்ட ரசாயனம் கலந்த வாழைக்காய்கள் அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன.
திருச்சி மாவட்டத்தில் எந்த ஒரு பகுதியிலும் ரசாயனம் தெளித்த பழங்கள் விற்பனைக்கு வருவது தெரிந்தால் பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு டாக்டர் ரமேஷ் குமார் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“