அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுவின் சார்பாக தமிழக முதல்வரின் தலையீட்டை கோரி இன்று நண்பகல் சேலம் மேட்டூரில் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் கல்லறையில், ‘சாகும் வரை உண்ணாவிரதம்’ தொடங்கியிருக்கின்றனர்.
டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் டாக்டர். நளினி, அனுராதா லட்சுமி நரசிம்மன் மற்றும் திவ்யா விவேகானந்தன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். 60 க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் உடன் அமர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவருமான மு. கருணாநிதியின் அரசாணை 354 ன் படி, 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு, உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட அரசு மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.
இந்த போராட்டத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுவின் தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளையிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் பேசியபோது:
கலைஞரின் அரசாணை 354:
“2009ஆம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்தபொழுது பிறப்பிக்கப்பட்டது தான் அரசாணை 354. அதில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், அரசு மருத்துவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தால் ஊதியபட்டை நான்கு கிடைக்கவேண்டும். இந்த அரசாணையை பிறப்பிப்பதற்கு அரசு தாமதிப்பதால், ஒவ்வொரு மாதமும் ஓவ்வொரு மருத்துவரும் ஏறக்குறைய நாற்பதாயிரம் ரூபாய் இழக்கிறோம்.
மேலும், இந்த அரசாணையில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அரசாணை 354யின் மூலம் DACP (Dynamic Assured Career Progression) எங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். இந்த திட்டம் பிறப்பித்ததற்கான காரணம், மருத்துவர்களின் படிப்பு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் செல்வதால் அவர்களுக்கான திருப்தியான வருமானம் வழங்கவேண்டும் என்பதற்காக தான்”.
அரசாணை 354 தொடர்பாக கடந்து வந்த பாதை:
“இது தொடர்பாக 2019ஆம் ஆண்டு, ராஜிவ் காந்தி மருத்துவமனையின் முன்பு உண்ணாவிரதத்தில் இருந்த பொழுது, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்களின் ஆதரவை தெரிவித்தார். அப்போது அவர், அடுத்த ஆட்சியில் தி.மு.க. வரும்பொழுது இந்த அரசாணையை பிறப்பிப்போம் என்ன வாக்குறுதி கொடுத்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
அதன்பிறகு, சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் ஆகியவர்களை பதினைந்து முறைக்கு மேல் சந்தித்து முறையிட்டோம். தமிழக அரசின் கவனம் பெறுவதற்காகவே ஐந்து முறைக்கு மேல் போராட்டம் நடத்தினோம். மதுரை மற்றும் சென்னையில் தர்ணா போராட்டம், சென்னை பல் மருத்துவக் கல்லூரியில் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம் ஆகியவை நடத்தியிருக்கிறோம். எதற்குமே தமிழக அரசின் சார்பில் பதில் வரவில்லை என்பதால், ‘சாகும் வரை உண்ணாவிரதம்’ போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இந்த போராட்டத்திற்காக உயிரை தியாகம் செய்த டாக்டர் லட்சுமி நரசிம்மனின் நினைவிடத்திற்கு அருகில் தற்போதைய போராட்டத்தை நடத்துகிறோம்.
கொரோனா காலத்தில் உலகமெங்கும் மருத்துவர்களை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.கர்நாடக மாநிலத்தில் கொரோனாவின் முதல் அலை காலத்திலேயே, பொது ஊதிய அமலாக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று கூறுகிறார்.
அரசாங்கம் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்துவது பற்றி:
“நாங்கள் 300 கோடி வருடத்திற்கு செலவிட கேட்கிறோம். தமிழக அரசு பலவிதமான திட்டங்கள் ஆரம்பிப்பதாக வாக்குறுதியும் ஆயத்த பணிகளும் தொடங்கி கொண்டிருக்கிறார்கள், ஆனால் எங்கள் கோரிக்கையை ஏற்க மறுக்கிறார்கள். எங்களின் பணி உயிர்காக்கும் முக்கியத்துவத்தில் இருப்பதால் மட்டுமே கேட்கிறோம். அதுபோக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்துவதற்கான போராட்டம் தான் இது”.
போராட்டத்தின் கோரிக்கைகள்:
1. அரசு மருத்துவர்களுக்கு டாக்டர் கலைஞர் கொடுத்த அரசாணை 354 ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்க வேண்டும்.
2. கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் தரப்பட வேண்டும். மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு படிப்புக்கேற்ற அரசு வேலை தரப்பட வேண்டும்.
3. அரசாணை 4D2 ஆல் பாதிக்கப்பட்ட பல் மருத்துவர்கள் உள்ளிட்ட 600 க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்.
4. சேலம் மாவட்டம் மேட்டூரில் செயல்படுத்தப்படும் சரபங்கா உபரி நீர் திட்டத்தால், மருத்துவர் லட்சுமி நரசிம்மனின் நினைவிட வளாகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் செயல்படுத்த வேண்டும்.
5. கார்பஸ் நிதியில் பல சிக்கல்கள் உள்ளன. அரசாங்கம் அந்தப் பிரச்சனைகளைச் சரிசெய்து எங்களுக்கு வழங்க வேண்டும்.
6. அரசாணை 64யில் கூறப்பட்டிருப்பது போல டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும்.
8. அரசு மருத்துவர்கள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் கிராமப்புற சேவையில் ஈடுபட்டிருக்கவேண்டும்.