பெங்களூரு:
கொரோனா பரவல்
கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு உயிரிழப்புகள் நிகழவில்லை. ஆனாலும் சுகாதாரத்துறை கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. பெங்களூருவில் முககவசம் அணியாமல் நடமாடும் மக்களுக்கு அபராதம் விதிப்பது அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுகாதாரத்துறை கமிஷனர் ரன்தீப் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பள்ளி-கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் யாருக்காவது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அத்தகையவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அதே நேரத்தில் பள்ளி-கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களை மூட தேவை இல்லை. நோய் பாதிப்பு ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
கட்டாயம் பரிசோதனை
பள்ளி-கல்லூரிகளில் ஒரே வகுப்பறையில் அதிகம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அந்த அறையை கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அந்த தளம் மட்டும் கொரோனா பாதித்த மண்டலமாக அறிவிக்க வேண்டும். அந்த தளத்தில் வசிப்பவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
15-க்கும் மேற்பட்டவர்
களுக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் நோய் அறிகுறி உள்ள அனைவருக்கும் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களின் உடல்நிலையை பொறுத்து அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்ப்பதா? என்பதை முடிவு செய்ய வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏதேனும் அறிகுறி இருந்தால் அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு ரன்தீப் தெரிவித்துள்ளார்.