அ.தி.மு.க ஆட்சியில் பவர் சென்டராக இருந்த கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாகக் கடந்தாண்டு முதல் கூடுதல் விசாரணையை தொடங்கியது காவல்துறை.
சசிகலா, விவேக் ஜெயராமன், ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் உட்பட 200-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கண்ணன் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸார், இரண்டாவது நாளாக இன்றும் கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில்வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
1991-ம் ஆண்டிலிருந்து ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கண்ணன், அவர் மறைவுக்குப் பிறகு சசிகலாவிடம் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். நீண்டகாலமாக ஜெயலலிதாவிடம் ஓட்டுநராகப் பணியாற்றியிருப்பதால் அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி கனகராஜ், போயஸ் கார்டனில் ஓட்டுநராகப் பணியாற்றி இருப்பதால் அவர் குறித்தும் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கனகராஜின் மனைவியை மிரட்டிய குற்றத்துக்காக, அவர் சகோதரர் பழனிவேல் என்பவரை சேலம் போலீஸார் நேற்று கைதுசெய்தனர்.
கண்ணனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக பலரைச் சந்தித்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டிருக்கின்றனர்.