டமாஸ்கஸ்: சிரியாவில் அல்-கய்தாவுடன் தொடர்புடைய குழுவைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர், அமெரிக்க பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புப் படை தரப்பில், “சிரியாவில் இட்லிப் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக அமெரிக்கப் படை தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த தேடுதல் வேட்டை, அல்-கய்தாவுடன் தொடர்புடைய குழுவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அபு ஹமாஸ் அல் ஏமனியை மையமாக கொண்டு இருந்தது. இந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் தனியாக சென்ற அபு ஹமாஸ் மீது எங்கள் படையினர் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவிலிருந்த அமெரிக்க குடிமக்கள் மீது அபு ஹமாஸ் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையில், அவர் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்டிருக்கிறார்.
அபு ஹமாஸ் மரணம் குறித்து சிரிய பாதுகாப்புப் படை தரப்பில், “ஏவுகணைத் தாக்குதலில் அபு ஹமாஸ் கொல்லப்பட்டிருக்கிறார். அவரது உடல், உடல் கூராய்வுக்காக மருத்துவமனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் உள்நாட்டுப் போர் 12 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இப்போரில் இதுவரை 3,50,209 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஆனால், இது உண்மையான எண்ணிக்கை இல்லை என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. சிரியாவில் இயங்கும் போர் கண்காணிப்புக் குழு இதுவரை சிரிய போரில் 4,94,438 பேர் பலியாகியிருப்பதாக தெரிவித்துள்ளது.
போர் காரணமாக சுமார் 50 லட்சம் மக்கள் வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். 6 லட்சம் மக்கள் உள் நாட்டிலேயே அகதிகளாக வேறு இடங்களுக்கு சென்றனர். சுமார் 1 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு உணவு உட்பட மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்படாமல் போனது. மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என மனிதாபிமானமற்ற முறையில் குண்டுகள் வீசப்பட்டன.
இட்லிப், அலெப்போ நகரங்கள் போரில் சூறையாடப்பட்டன. நாட்டின் பெரிய நகரங்களை அரசு காட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலும் பல நகரங்கள் தற்போதும் உள்ளதால் அவ்வப்போது அங்கு வன்முறைகள் நடந்து வருகின்றது.