தாய்லாந்தின் பாங்காக் விமான நிலையத்தில், 109 உயிருள்ள விலங்குகளைச் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற இந்தியப் பெண்கள் இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
கடந்த திங்கள்கிழமை தாய்லாந்திலிருந்து சென்னை செல்வதற்காக, நித்ய ராஜா, ஜாகியா சுல்தானா இப்ராஹிம் ஆகிய இரண்டு இந்தியப் பெண்கள் பாங்காக்கிலிருக்கும் சுவர்ணபூமி விமான நிலையம் வந்திருக்கின்றனர். அப்போது விமான நிலையத்தில் அதிகாரிகள், அவர்களின் சூட்கேஸ்களை பரிசோதனை செய்ததில், 109 உயிருள்ள விலங்குகளை அவர்கள் சட்டவிரோதமாகக் கடத்த முயன்றது தெரியவந்திருக்கிறது.
அதையடுத்து தாய்லாந்து அதிகாரிகள், 2019 வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 2015 விலங்கு நோய்ச் சட்டம், 2017 சுங்கச் சட்டம் ஆகியவற்றை மீறியதாக, இரண்டு பெண்களையும் கைதுசெய்தனர்.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய தாய்லாந்தின் தேசிய பூங்கா அதிகாரிகள், “அந்தப் பெண்களின் சூட்கேஸை எக்ஸ்ரே பரிசோதனை செய்ததில், 2 வெள்ளை முள்ளம்பன்றிகள், 2 எறும்பு தின்னிகள், 20 பாம்புகள், 35 ஆமைகள் மற்றும் 50 பல்லிகள் உயிருடன் இருந்தன. அதையடுத்து அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமாக விலங்குகள் கடத்தப்படுவது அதிகரித்திருக்கிறது. 2019-ம் ஆண்டு பாங்காக்கிலிருந்து சென்னை வந்த ஒரு நபரிடம் ஒரு மாத சிறுத்தை குட்டியைச் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வனவிலங்கு வர்த்தக கண்காணிப்பு நிறுவனமான TRAFFIC-ன் 2022-ம் ஆண்டின் அறிக்கையின்படி, 2011 முதல் 2020 வரையிலான கால இடைவெளியில் 18 இந்திய விமானங்களில் சுமார் 70,000-க்கும் மேற்பட்ட பூர்வீக, கவர்ச்சியான வன விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.