சென்னை, அண்ணா நகர் காவல் மாவட்டத்தில் இயங்கிவரும் அரசுப் பள்ளி ஒன்றில் வேதியியல் பாடப்பிரிவு ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் ஸ்ரீதர். இவரிடம் பயிலும் 12-ம் வகுப்பு மாணவிகளிடம் வாட்ஸ் அப்பில் ஆபாசமாக சேட்டிங் செய்ததாகவும், செல்போனில் ஆபாசமாக பேசியதாகவும் மாணவிகளின் பெற்றோர்கள் மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் புகார் அளித்தனர். புகாரோடு ஆசிரியர் ஸ்ரீதரால் பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகள், அவருக்கு எதிரான ஆதாரங்களையும் கொடுத்தனர். அதனடிப்படையில் குழந்தை நல குழுவினர் விசாரணை நடத்தியிருக்கின்றனர். விசாரணையில் ஆசிரியர் ஸ்ரீதர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையென தெரியவந்தது.
இதையடுத்து ஆசிரியர் ஸ்ரீதர்மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸார், ஆசிரியர் ஸ்ரீதரை போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், “கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைனில் வகுப்புகள் நடந்தபோது, ஆசிரியர் ஸ்ரீதர் தன்னிடம் பயின்ற மாணவிகள் சிலரிடம் ஆபாசமாக பேசியிருக்கிறார். அதற்கான வாட்ஸ்அப் சேட்டிங், ஆடியோக்கள் ஆதாரமாக கிடைத்திருக்கின்றன. அவற்றை ஆய்வுக்காக அனுப்பி வைத்திருக்கிறோம். சட்டப்படி ஆசிரியர் ஸ்ரீதரைக் கைதுசெய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்.”
இதற்கிடையில் ஆசிரியர் ஸ்ரீதர், ஒரு மாணவிக்கு அனுப்பியிருக்கும் வாட்ஸ்அப் மெசேஜில், “நீயும் நானும் நீண்ட தூரம் பைக்கில் டிராவல் செய்யணும். நீ பின்னால் அமர்ந்திருக்கும்போது சந்தோஷமாக இருந்தது” என்று மெசேஜ் அனுப்பியிருக்கிறார். மாணவி ஒருவரிடம் ஆசிரியர் பேசும் ஆடியோவும் போலீஸிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆடியோவில், “நான் அனுப்பிய மெசேஜ்களை உடனடியாக அழித்து விடு. போட்டோக்களை அழி. உன்னுடைய ஃப்ரெண்ட்ஸிடமும் சொல்லி மெசேஜ்களை அழித்துவிடு” என்று மாணவியிடம் ஆசிரியர் ஸ்ரீதர் சொல்கிறார். அதற்கு அந்த மாணவி, “சார், மற்ற மாணவிகள் பெரிசா ஏதோ பண்ணுகிறார்கள்” என்று கூறுகிறார்.
ஒரு மாணவியின் பெயரைக் குறிப்பிட்டு பேசும் ஆசிரியர், “அந்த மாணவியின் செல்போனிலிருந்து அசிங்கம், அசிங்கமாக மெசேஜ் வருகிறது” என்று சொல்கிறார். அதற்கு மாணவி, “சார், உங்களைப் பத்தி எல்லோரும் அவர்கள் வீட்டில் சொல்லிவிட்டார்கள்” என்று கூறுகிறார். மேலும், “சார், நீங்கள் ஏன் தேவையில்லாமல் அவர்களிடம் பழகினீர்கள்” என்று மாணவி கேட்டதும், “நான் நல்லதுதான் செய்தேன்” என்று ஆசிரியர் பதிலளிக்கிறார்.
தொடர்ந்து பேசும் ஆசிரியர் ஸ்ரீதர், “பர்த்டேக்கு வந்த மாணவிக்கு கையில் முத்தம் கொடுத்தேன். அது தப்பா? நீங்கள் ஏன் அந்த வாட்ஸ்அப் குரூப்பில் இருக்கிறீர்கள். அதிலிருந்து வெளியில் வந்து விடுங்கள். என்னைப் பற்றி காவல் நிலையத்தில் புகாரளித்தால் பத்து, பதினைந்து நாள்களில் வெளியில் வந்துவிடுவேன். எனக்கு இரண்டு பசங்க இருக்கிறார்கள். வேறு ஸ்கூலுக்கு சென்றுவிடுவேன். ஆனால் அசிங்கம் அப்படியேதானே இருக்கும். என்னை அசிங்கப்படுத்தி பார்ப்பதில் என்ன ஆசை அவர்களுக்கு” என்று கூறுகிறார். மாணவி பேசும் போது அருகில் இருக்கும் ஒரு பெண், சில தகவல்களை கேட்கும்படி சொல்கிறார். அதற்கேற்பதான் மாணவி, ஆசிரியரிடம் பேசுகிறார்.
ஆசிரியர் ஸ்ரீதரை, பள்ளி கல்வித்துறை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.