வண்டலூர்: சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 44.75 ஏக்கரில், ரூ.393.74 கோடியில், ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. இது செப்டம்பர் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மிகப் பெரிய பேருந்து நிலையமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இங்கிருந்துதான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், சென்னையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, பண்டிகை நாட்களின் போது கடும் நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இதனால், சென்னை மக்களும், வெளியூர் செல்பவர்களும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.
இதை தவிர்க்க, வெவ்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் சென்னையை சுற்றி இருக்கும் பல்வேறு 5 பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ரூ.393.74 கோடியில் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில், 44.75 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டப் பணிக்கு முன்னாள் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
அரசு புறநகர் பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகள் என அனைத்தும், ஒரே இடத்தில் இருந்து இயங்கும் வகையில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. எழில்மிகு தோற்றத்துடன் அனைத்து வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் இங்கு இடம் பெற உள்ளன.
இந்நிலையில், வரும் செப்டம்பர் முதல் இந்தப் புதிய பேருந்து நிலையம் செயல்படத் தொடங்கும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
மொத்தம் 6 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில், நவீன தொழில்நுட்பத்தில் இரண்டு அடித்தளங்கள், தரைதளம், முதல் தளம் என கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் அடித்தளத்தில் 260 கார்கள், 568 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும் இரண்டாவது அடித்தளத்தில், 84 கார்கள், 2,230 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும் அமைக்கப்படுகிறது.
தரைதளம், முதல் தளத்தில் பயணிகளுக்கான வசதிகளும், ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்டபோக்குவரத்துப் பணியாளர்களுக்கான வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன.
கடைகள், உணவகங்கள், துரித உணவகங்கள், பயணச்சீட்டு வழங்கும் இடங்கள், மருத்துவ மையம், மருத்துவமனை, தாய்ப்பால் ஊட்டும் அறை, ஏடிஎம் மையம், பொருட்கள் பாதுகாப்பு அறை, பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு கேமராக்கள் அறை, தரைதளத்தின் பல்வேறு பகுதிகளில் ஆண், பெண் கழிப்பறைகள், சிறுநீர் கழிப்பிடம், முகம் கழுவுமிடம் அமைய உள்ளன.
சுமார் 14 ஏக்கரில் கட்டப்படும் பேருந்துகள் நிறுத்துமிடத்தில், ஒரே நேரத்தில், 130 அரசுப் பேருந்துகள், 85 தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்ல வசதியாக 5 ஏக்கரில் 3,500 மாநகரப் பேருந்துகள் வந்து செல்ல மேற்கூரையுடன் கூடிய நடைமேடையும் அமைக்கப்பட்டுள்ளது.
நவீன வசதிகளுடன் அனைத்து கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது. சுமார் 60 சதவீதத்துக்கு மேல் பிரதான பணிகள் நடந்து முடிந்துள்ளன.
தாம்பரத்தில் இருந்து வரும் பேருந்துகள் இந்த புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்லும் வகையில் வசதி உள்ளது. ஆனால், செங்கல்பட்டில் இருந்து வரும் பேருந்துகள், புதிய பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு, ஜிஎஸ்டி சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நேரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும். கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லாததால், வண்டலூர் அல்லது ஊரப்பாக்கத்தில்தான் ரயில் பயணிகள் இறங்கி, கிளம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வர வேண்டும். ஆகவே, கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போதே எழுந்துள்ளது.
இதுகுறித்து சிஎம்டிஏ கட்டுமான பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
செப்டம்பரில் புதிய பேருந்து நிலையம் திறக்க அனைத்து பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. தற்போது 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட முக்கிய பணிகள் முடிந்துள்ளன. மற்றவை விரைந்து முடிக்கக்கூடிய பணிகள்தான். தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்படும். அதேபோல வட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளும் வந்து செல்லும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் சுமார் 200 மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அடுத்த ஓராண்டுக்குள் இதர அனைத்து பணிகளும் நிறைவு பெறும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.