சமீபத்தில், சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் மற்றும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்தின் கருத்து அவசியமில்லாதது என்று வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை கூறியது.
“இந்த கருத்துக்கள் முற்றிலும் தேவையில்லாதது மற்றும் இது இந்தியாவின் சுதந்திரமான நீதித்துறை அமைப்பில் தலையிடுவதாகும்” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறினார். “இந்தியாவில் உள்ள அதிகாரிகள், நிறுவப்பட்ட நீதித்துறை செயல்முறைகளின்படி கண்டிப்பாக சட்ட மீறல்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள். இத்தகைய சட்ட நடவடிக்கைகளை செயல்பாட்டிற்காக துன்புறுத்தல் என்று முத்திரை குத்துவது தவறானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.” என்று அரிந்த பாக்சி கூறினார்.
இந்த வார தொடக்கத்தில், மனித உரிமைகளுக்கான உயர் ஆணையரின் (OHCHR) ஐ.நா அலுவலகம், சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பது குறித்து கவலை தெரிவித்ததோடு, அவரை உடனடியாக விடுவிக்கவும் அழைப்பு விடுத்துள்ளது.
“இந்தியாவில் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா மற்றும் இரண்டு முன்னாள் காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம், அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 2002 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் அவர்களின் செயல்பாட்டிற்காகவும் ஆதரவுக்காகவும் அவர்கள் துன்புறுத்தப்படக்கூடாது” என்று ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் செவ்வாய்க்கிழமை ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
2002 குஜராத் கலவரத்தில் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி குற்றமற்றவர் என்று சிறப்பு விசரணைக் குழு சான்றளித்ததை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த ஒரு நாள் கழித்து அகமதாபாத் குற்றப் பிரிவு (டி.சி.பி) ஓய்வு பெற்ற மாநில டி.ஜி.பி ஆர் பி ஸ்ரீகுமாரை கைது செய்தது. இந்த வழக்கில் அவருடைய பங்கு நீதிமன்றத்தால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. மேலும், மும்பையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் ஆகியோர் மனுதாரரான ஜாகியா ஜாஃப்ரிக்கு ஆதரவளித்தனர் என்பது கேள்விக்குள்ளாகப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“