வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தனியார் எண்ணெய் நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்களுக்கு மட்டும் கச்சா எண்ணெய் விற்பனை செய்வதற்கான கட்டுப்பாடு நீக்கப்பட்டுஉள்ளது.டில்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடந்தது.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் கூறியதாவது:தற்போது தனியார் எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றை அரசு அல்லது பொதுத் துறை நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்க முடியும்.
இந்த விதிமுறையை நீக்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி இனி தனியார் எண்ணெய் நிறுவனங்கள் பொதுத் துறை நிறுவனங்களுடன், தனியார் நிறுவனங்களுக்கும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றை விற்பனை செய்யலாம்.
இந்த உத்தரவால், உள்நாட்டில் மேலும் சுலபமாக தொழில் செய்ய வழி ஏற்படும். கடந்த, 2014 முதல், எண்ணெய் மற்றும் எரிவாயு வளப்பகுதி ஒதுக்கீடு இரு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அமைச்சரவைக் கூட்டத்தில், ஆரம்ப வேளாண் கடன் சங்கங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில், 2,516 கோடி செலவில் கணினிமயமாக்கவும் ஒப்புதல் தரப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
– நமது சிறப்பு நிருபர் –
Advertisement