திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் உள்ளிட்ட ரூ.129 கோடியே 56 லட்சம் செலவில் முடிவுற்ற 28 திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.13 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டிலான 6 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 16,820 பயனாளிகளுக்கு ரூ.103 கோடியே 42 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 29) திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில், திருப்பத்தூர் நகரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் உள்ளிட்ட 129 கோடியே 56 லட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 28 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 13 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 16,820 பயனாளிகளுக்கு 103 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட தமிழக முதல்வர் நேற்றிரவு (ஜூன் 28) திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சென்றடைந்தார். அதனைத் தொடர்ந்து இன்று (ஜூன் 29) காலை திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
> திருப்பத்தூர் நகரத்தில் ரூ.109.71 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தை தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். இப்புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் 10.38 ஏக்கர் பரப்பளவு பகுதியில் 2,94,565 சதுரஅடி கட்டடப் பரப்பளவில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது.
> இவ்வளாகத்தின் தரைத் தளத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தேர்தல் அலுவலகம், தபால் அலுவலகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட கருவூலம், ATM வசதியுடன் கூடிய வங்கி, மக்கள் குறைத்தீர்வு கூடம் ஆகியவையும் உள்ளன.
> முதல் தளத்தில் மாவட்ட கருவூல அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலகம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், சிறப்பு திட்ட அலுவலகம், மாவட்ட சமூகநல அலுவலகம், எல்காட் மையம், முத்திரைதாள் அலுவலகம் ஆகிய அலுவலகங்களும் உள்ளன.
> இரண்டாம் தளத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அறை, மாவட்ட வருவாய் அலுவலர் அறை, நேர்முக
உதவியாளர்கள் அறைகள், நில பிரிவு அலுவலகம் ஆகிய அலுவலகங்களும், மூன்றாம் தளத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் அறை, உதவி இயக்குநர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களும், ஏனைய தளங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களும் செயல்படும்.
> மேலும் மூன்று பெரிய கூட்டரங்கங்கள், 3 சிறிய கூட்டரங்கங்கள், செயற்கை நீரூற்றுடன் கூடிய பூங்கா மற்றும் புல்வெளி, நடைபாதை மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பு, அலங்கார விளக்குடன் கூடிய தெரு விளக்குகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
திறந்து வைக்கப்பட்ட திட்டப் பணிகளின் விவரங்கள்
> வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 2 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் வாணியம்பாடியில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடம்.
> தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 4 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் வாணியம்பாடி வட்டத்தில் கட்டப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் விடுதிக் கட்டடம்.
> பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ஆம்பூர் வட்டம், சோலூர் கிராமத்தில் 4 கோடியே 10 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சிறுபான்மையினர் நலக் கல்லூரி விடுதிக் கட்டடம்.
> மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 5 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், புங்கம்பட்டு நாடு பகுதிகளில் 2 ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள், 16 துணை சுகாதார நிலையங்கள், புங்கம்பட்டு நாட்டில் செவிலியர் குடியிருப்பு மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் குடியிருப்பு, புதூர் நாட்டில் மருத்துவ அலுவலர் குடியிருப்பு, பச்சூரில் புறநோயாளிகளுக்கான கட்டடம்.
> ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் திருப்பத்தூர் வட்டம், ஆதியூர் இராவுத்தம்பட்டியில் 52 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடம்.
> நீர்வளத் துறை சார்பில் ஆம்பூர் வட்டம், வண்ணாந்துறையில் மாநில நிதியின் மூலம் கானாற்றின் குறுக்கே 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை;என மொத்தம் 129 கோடியே 56 லட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 28 பணிகளை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
அடிக்கல் நாட்டப்பட்ட திட்டப் பணிகளின் விவரங்கள்
> தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் வாணியம்பாடியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 3 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொழில்நுட்ப மையக் கட்டடம் கட்டும் பணி.
> சுற்றுலாத் துறை சார்பில் ஜோலார்பேட்டை ஒன்றியம், ஏலகிரி மழையில் 2 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாகச சுற்றுலாத்தளம் அமைக்கும் பணி.
> ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 6 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பத்தூர் வட்டத்தில் கொடுமாம்பள்ளி, பூங்குளம் மற்றும் விஷமங்கலம் ஆகிய பகுதிகளில் பாம்பாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள், வாணியம்பாடி வட்டம், கொல்லகுப்பம், கானாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி; என மொத்தம் 13 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள 6 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட அரசு நலத்திட்ட உதவிகள்
> வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் தமிழக முதல்வர் 16,820 பயனாளிகளுக்கு 103 கோடியே 42 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், டி.எம்.கதிர்ஆனந்த், சி.என். அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் க.தேவராஜி, ஏ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், அமுலு விஜயன், எம்.பி. கிரி, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அமர்குஷ்வாஹா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.