அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகாரில் தொடர்புடைய, நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட, 12 அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுமதி வழங்காமல், தி.மு.க., அரசு எட்டு மாதங்களாக இழுத்தடிப்பது, சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலுக்கு முன், ஊழலை ஒழிக்க வந்த உலக மகா உத்தமர் போல, மேடையில் பேசியது, முதல்வர் ஸ்டாலினுக்கு மறந்து விட்டதா?
தேர்தல் பிரசாரத்தில், தி.மு.க.,வினர், ‘அள்ளி’ விட்டதை எல்லாம் நம்புற அளவுக்கு, நீங்கள் அப்பாவியா என்ன?
கேரள மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரன் பேச்சு:
கேரளா, தமிழகம், மேற்கு வங்கம் மற்றும் டில்லி மாநில அரசுகள், மத்திய அரசுக்கு எதிராக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகின்றன. மத்திய, பா.ஜ., அரசு திட்டங்களின் பெயர்களை மாற்றி, தங்களின்திட்டங்கள் போல சித்தரிக்கின்றன.
அது சரி… மத்திய அரசு திட்டத்தை எல்லாம், மாநிலத்தில் உள்ள ஆளுங்கட்சி பிரபலப்படுத்திட்டு இருக்குதுன்னு ஆறுதல் பட்டுக்க வேண்டியது தான்!
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை:
நீதிக்காக போராடியவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு, உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு. ஆளுங் கட்சியினரை பாதுகாக்கும் வகையில், தீஸ்தா சீதல்வாட் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் கூறுவது துரதிர்ஷ்டமானது.அதிகாரிகளை கேள்வி கேட்பவர்களை தண்டிக்க, உச்ச நீதிமன்றம் விரும்புகிறது.
போலி ஆவணங்கள் தயாரித்து அளித்த குற்றச்சாட்டில்,தீஸ்தாவை குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்… குஜராத் கலவர வழக்கின் தீர்ப்புக்காக, 19 ஆண்டுகள் பிரதமர் மோடி பொறுமை காத்தாரே… கொஞ்ச நாட்கள் பொறுமையா இருந்தால், தீஸ்தாவின் பின்னணியும் வெளிச்சத்துக்கு வரும்!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
1992-ல் துவங்கப்பட்ட, ‘தொட்டில் குழந்தை’ திட்டம் பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் தான், சிசுக்களை தெருக்களில் வீசி எறியும் நிலை உருவாகியுள்ளது. பெண் குழந்தைகள், குழந்தைகள் அல்ல; அவர்கள் வீட்டின் பெண் தெய்வங்கள். இந்த உணர்வை ஏற்படுத்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தொட்டில் குழந்தை திட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தணும் என்று சொல்றது சரி தான்… அதுக்காக பெண் குழந்தைகளை, ‘தெய்வங்கள்’ என புனிதப்படுத்துவதாக கூறி வீட்டுக்குள் அடைப்பது சரியா?