புதுடெல்லி: நாட்டின் துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, நாட்டின் 16வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 5ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஜூலை 19ம் தேதி கடைசி நாளாகும். ஜூலை 20ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு ஜூலை 22ம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 6ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தலில் மாநிலங்களவை எம்பி.க்கள் 233, மக்களவை எம்பி.க்கள் 543, 2 அவைகளிலும் உள்ள மொத்த நியமன எம்பி.க்கள் 14 பேர் வாக்களிக்க உள்ளனர்.* ஜனாதிபதி தேர்தலுக்கு 115 பேர் வேட்பு மனு ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில், பாஜ கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். கடைசி நாளான நேற்று வரையில் மொத்தம் 115 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மீதான பரிசீலனை இன்று நடக்கிறது. * ஜனாதிபதி தேர்தலை எதிர்த்த மனு தள்ளுபடிஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு 50 எம்பி அல்லது எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். அதேபோல், அதை 50 பேர் வழிமொழிய வேண்டும் என்ற சட்ட விதிமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை நேற்று பரிசீலித்த நீதிபதிகள் சூரியகாந்த், பர்திவாலா அடங்கிய விடுமுறைகால அமர்வு, ‘ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்கள் நடக்க உள்ள நிலையில், இந்த மனுக்களை விசாரிப்பதற்கான உகந்த நேரம் இதுவல்ல’ எனக் கூறி அவற்றை தள்ளுபடி செய்தனர்.