அன்காரா: துருக்கியில் சுமார் நூற்றுக்கணக்கான நாணயங்கள், நகங்கள்,பேட்டரிகள் நோயாளியின் வயிற்றில் இருந்தது மருத்துவர்களை அதிர்ச்சியடையச் செய்தது.
துருக்கியில் 35 வயதான நபர் ஒருவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் எண்டோஸ்கோபி செய்து பார்த்தபோது பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நோயாளியின் வயிற்றில் 233 காயின்களும், ஏராளமான நகங்களும், பேட்டரிகளும், கற்களும் கண்டறியப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, அந்த நபருக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில், அவரது வயிற்றிலிருந்து அனைத்து பொருட்களையும் மருத்துவர்கள் நீக்கினர். இந்தப் பொருட்கள் எவ்வாறு நோயாளியின் வயிற்றில் சென்றன என்பது குறித்த விவரம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்று துருக்கி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர் பெனிசி கூறும்போது, “பெரியவர்களுக்கு இந்த மாதிரியான நிலையை நாங்கள் பார்த்தது இல்லை. அவரது வயிற்றில் இருந்த நாணயங்கள், நகங்கள், கற்கள், ஸ்க்ரூக்கள், கண்ணாடிகள் என அனைத்தும் முற்றிலுமாக நீக்கப்பட்டன. அவர் நலமாக இருக்கிறார்” என்று தெரிவித்தார்.
வயிற்றிலிருந்து நூற்றுக்கணக்கான காயின்கள் கண்டறியப்பட்ட நிகழ்வு, துருக்கியின் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.