தமிழ் சினிமா உலகம் அடுத்தடுத்த நடிகர் பூ ராமு, நடிகை மீனாவின் கணவர் வித்யாசகர் இருவரின் அடுத்தடுத்த மரணங்களால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. மீனாவின் கணவர் வித்யாசாகர் இளம் வயதில் உயிரிழந்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மீனாவின் கணவருக்கு என்ன ஆனது?
தமிழ் சினிமாவில் 1982-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா 90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். ரஜினி, கமல், விஜய், அஜித், கார்த்தி என முன்னணி நடிகர்களுன் ஜோடியாக நடித்து புகழ்பெற்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமாக்களில் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்த நடிகை மீனா 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டு பெங்களூருவில் செட்டில் ஆனார். மீனா – வித்யாசகர் தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
திருமணத்துக்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு, நடிகை மீனா சினிமாவிலும் வெப் சீரிஸிலும் நடிக்கத் தொடங்கி பிஸியாகியுள்ளார். மீனாவின் மகள் நைனிகாவும் விஜய் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார்.
இந்த சூழ்நிலையில்தான், மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூன் 28) உயிரிழந்தார். நடிகை மீனாவின் கணவர் வித்யாசகர் இளம் வயதிலேயே உயிரிழந்தது தமிழ் சினிமா உலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. தமிழ் சினிமா நடிகர்கள் பலரும் நடிகை மீனாவுக்கு ஆறுதலைத் தெரிவித்துவருகின்றனர்.
இதையடுத்து, வித்யாசகரின் உடல் பெசண்ட் நகர் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. நடிகை மீனா ஆறாத் துயரில், தனது கணவருக்கு முத்தமிட்டு கண்ணீருடன் பிரியா விடைகொடுத்து அஸ்தியைப் பெற்றுக்கொண்டார்.
மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா தொற்று காரணமாக இறந்தார் என்று முதலில் செய்திகள் வெளியானது. பின்னர், அவர் நுரையீரல் பாதிப்பால் இறந்தார் என்று செய்திகள் வெளியானது.
வித்யாசாகருக்கு கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டார். ஆனால், வித்யாசாகருக்கு ஏற்கெனவே, நுரையீரல் பாதிப்பு இருந்துள்ளது. கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புக்ளால் மேலும் உடல்நிலை மோசமடைந்து இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதற்கு காரணம் புறாக்களின் எச்சம் கலந்த காற்றை சுவாசிப்பதால் ஏற்படும் நுரையீரல் தொற்று நோய் என்று கூறப்படுகிறது. பெங்களூரில் அவருடைய வீட்டுக்கு பக்கத்தில் நிறைய புறாக்கள் வளர்க்கப்படுகிறது. அதனால், நுரையீரல் நோய் ஏற்பட்டு மேலும் மோசமடைந்து உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“