நள்ளிரவில் நெரிசலுக்கு உள்ளாகும் பெங்களூரூ- சென்னை தேசிய நெடுஞ்சாலை: கவனிக்குமா நிர்வாகம்?

பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது; 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அகலப்படுத்தும் பணி மற்றும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
image
இதன் காரணமாக மாலை வேளையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். ஆனால், சமீப காலமாக நள்ளிரவில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், சுங்குவார்சத்திரம் போன்ற தொழில் பூங்காவில் இருந்து இரவு பணி முடிந்து வருவதால் நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அத்துடன் பிரபல தனியார் தொழிற்சாலையில் இருந்து புதிய கார்களை கண்டெய்னர் லாரிகள் மூலம் துறைமுகத்திற்கு அனுப்பி வைத்தும் வருகின்றனர்.
image
இந்த கண்டெய்னர் லாரிகள் தண்டலம், செட்டிபெடு, பூவிருந்தவல்லி, மதுரவாயில் வழியாக சென்னை துறைமுகத்தை சென்றடையும். நசரத்பேட்டையில் அமைந்துள்ள பூவிருந்தவல்லி போக்குவரத்து சோதனை சாவடியில் போக்குவரத்திற்கான படிவங்களில் போக்குவரத்துத் துறை சார்பில் முத்திரை பெற வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை காணமுடிகின்றது.
image
இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக நள்ளிரவு நேரம் பணி முடிந்து வரும் ஊழியர்கள், வாகன ஓட்டிகள் பெருமளவில் அவதிப்படுகின்றனர், இதனால் விபத்து எண்ணிக்கை அதிகரிக்கின்றது. கடந்த சில தினங்களாக ஏற்படும் இந்த வாகன நெரிசலை சீர்செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. வாகன ஓட்டிகளின் நலன் கருதி போக்குவரத்துத் துறை சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.