நாளை தொடங்கி 43 நாட்கள் நடக்கிறது பக்தர்கள் வருகையால் அமர்நாத் யாத்திரை விழாக்கோலம் பூண்டது பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஜம்மு: நாளை தொடங்கி 43 நாட்கள் நடக்கும் அமர்நாத் யாத்திரை, பக்தர்கள் வருகையால் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் பயணம் செய்வார்கள். கொரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக அமர்நாத் புனித யாத்திரை நடைபெறவில்லை. ஜம்மு காஷ்மீரின் நகரில் இருந்து 141 கிமீ தூரத்தில் இமயமலை பகுதியில் உள்ள லிடர் பள்ளத்தாக்கில் இந்த அமர்நாத் குகை அமைந்துள்ளது. இங்கு பனி உறைந்து சிவலிங்க வடிவில் காட்சி தருவதை பக்தர்கள் தரிசிப்பதாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் அமர்நாத் யாத்திரை நடப்பது வழக்கம். இந்தாண்டு, இந்த புனித யாத்திரை நாளை தொடங்கி 43 நாட்கள் நடைபெற உள்ளது. தெற்கு காஷ்மீாின் பஹல்காமில் உள்ள நுன்வான் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் ஆகிய 2 வழிகளில் யாத்திரை தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த யாத்திரை நாளை தொடங்குவதை முன்னிட்டு அனுமதி பெற்ற பக்தர்கள், ஜம்மு மலையடிவார முகாமில் திரண்டு வருகின்றனர். நாளை ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுனர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து யாத்திரையின் முதல் குழுவை அனுப்பி வைக்கிறார். இந்த யாத்திரைக்காக ஜம்மு நகர் முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு மிக பொிய சவாலாக உள்ளது. இந்த பகுதிகளில் பயங்கரவாதிகள் மற்றும் டிரோன்கள் மூலம் வீசப்படும் குண்டுகள் ஆகியவற்றால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. இங்குள்ள பகுதிகளில் 5 பதிவு மையங்கள், 3 டோக்கன் மையங்கள் மற்றும் 32 தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், அமர்நாத் செல்லும் வாகனங்கள் மற்றும் பக்தர்களின் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு, விரைவு எதிர்வினை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வாகனங்களை செயற்கைக் கோள் மூலம் கண்காணிப்பது, செல்போன் ஜாமர்கள், சிசிடிவி கேமராக்கள், குண்டு வீச்சு துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக்க நிலவறைகள், வெடிகளை கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகிறது. ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.