சண்டிகர்: கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், பல மாநிலங்கள் ஜி.எஸ்.டி., இழப்பீட்டை நீட்டிக்க கோரின. ஆனால், அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிவடைந்தது. அதே சமயம் பல்வேறு பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டு உள்ளதால், அவற்றின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
பரிந்துரைகள்
கடந்த இரண்டு நாட்களாக, சண்டிகரில் நடைபெற்ற 47வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், பல்வேறு பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, ஜி.எஸ்.டி., அறிமுகத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்டும் வகையில் வழங்கப்படும் இழப்பீட்டை நீட்டிப்பது குறித்து விவாதிக்கப் பட்டது.
ஜூன் 30ம் தேதியுடன் முடிவடையும் இந்த இழப்பீட்டுக்கான காலவரையறையை மேலும் நீட்டிக்க, பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்கள் கோரின. ஆனால், இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து விளக்கினார்.
அதில், 16 மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்கள், இழப்பீடு குறித்து பேசினர் என்றும், அதில் மூன்று நான்கு பேர், இழப்பீட்டை நிறுத்தி, சொந்தமாக வருவாய் வாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்து பேசினர் என்றும் தெரிவித்தார்.
மேலும் சூதாட்ட விடுதிகள், குதிரைப் பந்தயம், ஆன்லைன் கேமிங் ஆகியவற்றுக்கு 28 சதவீத வரிவிதிப்பது குறித்தும் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. சூதாட்ட விடுதிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவது குறித்த கோவாவின் கோரிக்கையை அடுத்து, இது குறித்து மீண்டும் அமைச்சர்கள் குழு ஆலோசிக்கும் என கூறப்பட்டு உள்ளது.
அவகாசம்
மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா தலைமையிலான அமைச்சர்கள் குழு, இது குறித்து மேலும் ஆலோசித்து ஜூலை 15ம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கூறப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி., கவுன்சில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மீண்டும் கூடி, இவ்விவகாரம் குறித்து முடிவெடுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
வரி அடுக்குகளை மாற்றியமைப்பது குறித்த அமைச்சர்கள் குழு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம், மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் உள்ளிட்டவற்றை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து, இக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், எதுவும்விவாதிக்கப்படவில்லை.
விலை உயரும் பொருட்கள்:
ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 47வது கூட்டத்தின் முடிவின் படி, சில பொருட்களுக்கான வரி, ஜூலை 18ம் தேதி முதல் அதிகரிக்கிறது.
* பிராண்டு அல்லாத பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் பால் பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்கள், 5 சதவீத வரி அடுக்குக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளன. இதுவரை இவற்றுக்கு வரி இல்லாமல் இருந்தது. இதையடுத்து லஸி, மோர், தயிர், கோதுமை மாவு, தேன், அப்பளம், பருப்புகள், பதப்படுத்தப்படாத இறைச்சி மற்றும் மீன் உள்ளிட்ட பலவற்றின் விலை அதிகரிக்கும்
* ஓர் இரவுக்கு ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக கட்டணம் கொண்ட ஹோட்டல் அறைகள் மற்றும் தினசரி ஐந்தாயிரம் ரூபாய்க்கும் அதிகமான கட்டணம் கொண்ட மருத்துவமனை அறைகள் ஆகியவற்றுக்கு, 12 சதவீத வரி விதிக்கப்படும்.
* சூரிய சக்தியில் இயங்கும் வாட்டர் ஹீட்டர்கள், பதப்படுத்தப்பட்ட தோல் ஆகியவற்றுக்கான வரி 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது
* எல்.இ.டி., விளக்குகள், கத்தி பேனா, மை, பிளேடு போன்றவற்றுக்கு வரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது
* மோட்டார் பம்பு, பால் பண்ணை இயந்திரங்களுக்கான வரியும் 18 சதவீதமாக அதிகரிதுள்ளது.
* ‘இ- – வேஸ்ட்’ எனும் மின்னணு பொருள் குப்பைக்கான வரி 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்கிறது.