பாலிமர் பூங்கா சுற்றுச்சூழல் அனுமதி ரத்து தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

புதுடெல்லி: பாலிமர் பூங்கா விவகாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்த தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ‘டிட்கோ’ எனப்படும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும், ‘சிப்காட்’ என்னும் தொழில் முன்னேற்ற நிறுவனமும் இணைந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் வயலூர், புழுதிவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில்  265 ஏக்கரில் ‘தமிழ்நாடு பாலிமர் பூங்கா’வை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக மாநில சுற்றுச்சூழல் அனுமதியும் வழங்கப்பட்டது.இந்நிலையில், இந்த திட்டத்துக்கு எதிராக சரவணன் என்பவர் தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘இந்த திட்டம் அமையும் பகுதிகள் அனைத்தும், முக்கியமான கடல் பகுதியாகும். இந்த தொழில் பூங்காவினால் வரக்கூடிய சுற்றுச்சூழல் மாசு, அப்பகுதியின் இயற்கை சூழலை கடுமையாக பாதிக்கும்,’ என தெரிவித்தார். இதை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு, மாநில அரசு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியில் ஏராளமான குறைபாடுகள் இருப்பதாகக் கூறி அதை ரத்து செய்தது. மேலும், ‘இந்த பூங்கா அமைக்கப்படும் இடம், 1996ம் ஆண்டை கடலோர மண்டல மேலாண்மை திட்டத்தின் கீழ் உப்பு நீர் பகுதியாகவும், தகுதி வாய்ந்த நீர்நிலைப் பகுதியாகவும் வகைப்படுத்தப்பட்டு இருப்பதால், இத்திட்டத்தால் இயற்கை சூழலில் சமநிலை மாற்றத்தை ஏற்படுத்தி விடும். அதனால், இந்த பூங்காவை அமைப்பது குறித்து மீண்டும் மறு ஆய்வு செய்ய வேண்டும்,’ என கடந்த மே மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் குமணன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘பாலிமர் தொழில் பூங்கா விவகாரத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்து நடைமுறைகளும் சரியான முறையில் பின்பற்றப்பட்டுள்ளது. ஆனால், அதை சரியாக ஆய்வு செய்யாமல் தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அனுமதியை ரத்து செய்துள்ளது. அதன் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்,’ என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.