பிரித்விராஜின் கடுவா தள்ளிப்போனதன் பின்னணி இதுதான்
பிரித்விராஜ் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக பல படங்கள் ஓடிடியில் வெளியாகி வந்த நிலையில் தற்போது அவர் நடித்துள்ள கடுவா திரைப்படம் ஜூன் 30ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் திடீரென இந்த படம் ஜூலை 7ஆம் தேதி ரிலீசாகும் என தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. சில எதிர்பாராத சூழ்நிலை காரணமாக இந்த படம் ஒரு வாரம் தள்ளி வைக்கப்படுவதால் ரசிகர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என பிரித்விராஜ் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இந்த படத்தை பிரித்விராஜே தயாரித்து இருப்பதால் தென்னிந்திய மொழிகள் நான்கிலும் வெளியிடும் விதமாக உருவாக்கியுள்ளார். அதற்கேற்றபடி கடந்த சில நாட்களாக பெங்களூர், ஐதராபாத், சென்னை என புரமோஷன் நிகழ்ச்சிகளில் பரபரப்பாக கலந்து கொண்டு வந்தார். சென்னையில் அவர் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது கூட ஜூன் 30ஆம் தேதி ரிலீஸ் என்பதாகத்தான் இருந்தது. ஆனால் மறுநாள் காலை அவர் அதிரடியாக தேதி மாற்றத்தை அறிவித்தார். இதற்கு காரணம் ஏற்கனவே இந்த படம் பற்றி புகைந்து கொண்டிருந்த ஒரு விஷயம் இப்போது மீண்டும் பிரச்சனையை கிளப்பியுள்ளது.
இந்தப்படம் ஒரு காலத்தில் போலீசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய, தற்போதும் உயிருடன் வாழுகின்ற கடுவாக்குன்னல் குருவச்சன் ஜோஸ் என்பவரை மையப்படுத்தி உருவாகியுள்ளது.. இந்த படத்தின் கதையை ஜினு ஆபிரகாம் எழுதியுள்ளார். அதேசமயம் இந்த படம் துவங்கப்பட்ட அந்த சமயத்திலேயே இதே நபரை மையப்படுத்தி சுரேஷ்கோபி நடிக்கும் ஒத்தக்கொம்பன் என்கிற படமும் தயாராக ஆரம்பித்தது. அந்த படத்திற்கு மனீஷ் என்பவர் கதை எழுதியுள்ளார்.
ஆனால் இந்த படத்தின் நிஜ நாயகனான கடுவாக்குன்னல் குருவச்சன் ஜோஸ், பிரித்விராஜின் படம் உருவாகும்போதே இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தில் சுரேஷ்கோபி தான் நடிக்க வேண்டும் என தீர்மானமாக கூறியிருந்தார். அதற்கேற்றபடி ஒத்தக்கொம்பன் படம் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் அதற்கு முன்னதாகவே கடுவா படத்தின் படப்பிடிப்பு துவங்கி விட்டதால் அந்த படத்தின் கதாசிரியர் ஜினு ஆபிரகாம் ஒத்தக்கொம்பன் படக்குழுவினர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த சமயத்தில் கடுவா படக்குழுவினருக்கு ஆதரவாகவே நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இடையில் கடுவாக்குன்னல் குருவச்சன் ஜோஸ், கடுவா படத்திற்கான தனது எதிர்ப்பை தெரிவித்து வந்தாலும் படக்குழுவினர் அதை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் கடுவாக்குன்னல் குருவச்சன் ஜோஸ், கடுவா படத்தில் தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் பற்றி வெளியுலகிற்கு தவறான விஷயங்களை வெளிப்படுத்துமாறு எடுத்திருப்பதாகவும் அதனால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்குமாறும் அதற்குள் சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்துவிட்டு அவர் சொன்னது போல அவரையும் அவரது குடும்பத்தையும் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளனவா என்பதை ஆய்வு செய்யவேண்டும் என்றும் சென்சார் அதிகாரிகள் அறிக்கை கொடுத்த பின்னரே இந்த வழக்கில் முடிவு எடுக்க முடியும் என்றும் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து தான் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது.