மணிலா: 2021-க்கான அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பிலிப்பைன்ஸ் நாட்டு இதழாளர் மரியாவின் செய்தி நிறுவனமான ராப்லரரை மூட பிலிப்பைன்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தடைக்கான காரணமாக, வெளிநாட்டு ஊடக விதியை ராப்லர் மீறிவிட்டதாக பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் அதிபர் பதவியிலிருந்து ரோட்ரிகோ விலகுவதற்கு ஒரு நாள் முன்னர் இந்த உத்தரவை பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது.
எனினும் ராப்லர் செய்தித் தளம் தொடர்ந்து இயங்கும் என்று மரியா உறுதிப்பட கூறி இருக்கிறார். தடை குறித்து ராப்லர் ஊடகம் வெளியிட்ட அறிவிப்பில், “நாங்கள் தொடர்ந்து எங்கள் வேலையை செய்ய இருக்கிறோம். எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் பலவும் மரியாவுக்கு தனது ஆதரவை வழங்கி உள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட்டின் மனித உரிமை மீறல்களை மரியா தொடர்ச்சியாக எழுதி வந்தார்.
யார் இந்த மரியா? – பிலிப்பைன்ஸ் நாட்டில் ஊடக சுதந்திரப் போராட்ட முகமாக மரியா அறியப்படுகிறார். பிலிப்பைன்ஸில் பிறந்து அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் வளர்ந்தவர் மரியா. புகழ்வாய்ந்த பிரிஸ்டன் பல்கலையில் படித்தவர். அமெரிக்காவில் தன்னால் ஒருபோது இருக்க முடியாது என தன்னுடைய சொந்த நாடான பிலிப்பைன்ஸுக்கு வருவதற்கு முடிவு செய்தார். அதுவும் பிலிப்பைன்ஸுக்குள் 1986-ல் மரியா அடியெடுத்து வைத்தபோது சர்வாதிகாரி பெர்டினாண்ட் மார்க்கோஸின் ஆட்சி மக்கள் புரட்சியால் கவிழ்க்கப்பட்டிருந்தது.
பிலிப்பைன்ஸ் செய்தித் தொலைக்காட்சி ஏபிஎஸ்-சிபிஎன் சேனலின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். புலனாய்வு இதழியலுக்கென 2012-ல் ‘ராப்லர்’ டிஜிட்டல் ஊடக நிறுவனத்தைத் தொடங்கினார். பிலிப்பைன்ஸில் நிலவிய வன்முறை வெறியாட்டத்தையும், சர்வாதிகாரத்தையும் இதழியல் மூலம் வெளி உலகுக்கு அவர் அம்பலப்படுத்தினார். மரியா வெளிக் கொண்டுவந்த புலனாய்வுச் செய்திகளுக்கு பிலிப்பைன்ஸ் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.
தொடர்ந்து அரசுக்கு நெருக்கடி கொடுத்ததன் காரணமாக மரியா மீது 2020-ல் சைபர் அவதூறு வழக்கு பாய்ந்தது. வரி ஏய்ப்பு, அயல்நாடுகளில் சொத்துக் குவிப்பு உள்ளிட்ட வழக்குகள் மரியா மீது சுமத்தப்பட்டன. ஆனால், இவற்றுக்கெல்லாம் மரியா அசரவில்லை. தொடர்ந்து பத்திரிகை சுதந்திரத்திற்காக அவர் குரல் கொடுத்து வருகிறார்.