பாட்னா: பீகாரில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 16 பேர் பலியாகினர். பீகாரில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள 38 மாவட்டங்களில் 7 மாவட்டங்களில் மின்னல் தாக்கி 16 பேர் பரிதாபமாக பலியாகினர். அதிகபட்சமாக கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் 4 பேரும், போஜ்பூர் மற்றும் சரண் மாவட்டங்களில் தலா 3 பேரும் உயிரிழந்துள்ளனர். இதேபோன்று, மேற்கு சம்பரான் மற்றும் அராரியா மாவட்டங்களில் தலா 2 பேரும், பங்கா மற்றும் முசாபர்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் என மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பேரிடர் மேலாண் கழகத்தின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி முன்னெச்சரிக்கையாக இருக்கும்படியும் வானிலை மோசமடைந்துள்ள சூழலில், மக்கள் வீடுகளிலேயே இருக்கும்படியும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.ஜூன் மாதத்தில் மட்டும் இதுவரை மின்னல் தாக்கி 36 பேர் உயிரிழந்துள்ளதாக பீகார் அரசு தெரிவித்துள்ளது. ஆண்டு பலி2017 2,8852018 2,3572019 2,876இந்தியாவில் ஆண்டுதோறும் மின்னல் தாக்கி பலியாவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதில், 2001ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையில் 42 ஆயிரத்து 500 பேர் இறந்துள்ளனர். 2020ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் மார்ச் 31, 2021 தேதி வரையில் 1,619 பேர் இறந்துள்ளனர். இதில், அதிகப்பட்சமாக பீகாரில் 401, உபி.யில் 238, மத்திய பிரதேசத்தில் 228, ஒடிசாவில் 156, ஜார்க்கண்ட்டில் 132 பேர் பலியாகினர்.