பெர்லின்: “புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது” என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருக்கிறார்.
உக்ரைன் போர் குறித்து செவ்வாய்க்கிழமை அன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு போரிஸ் ஜான்சன் அளித்த பேட்டியில், “ரஷ்ய அதிபர் புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால். அவர் அப்படி இல்லை… எனினும் அவர் பெண்ணாக இருந்திருந்தால், பைத்தியக்காரத்தனமான, ஆடம்பரமான வன்முறையை நிகழ்த்தி இருக்க மாட்டார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் என்பது நச்சு மிக்க ஆண்மைக்கான உதாரணம். மக்கள் அனைவரும் போர் நின்று அமைதி ஏற்பட வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் இப்போது வரை அதற்கான எந்த ஒப்பதமும் நடக்கவில்லை. புதின் அமைதிக்கான வேண்டுகோளை விடுக்கவில்லை
உலகெங்கிலும் உள்ள பெண்கள் அனைவரும் கல்வி பயின்று நிறைய பெண்கள் உயர் பதவிகளுக்கு வர வேண்டும்” என்று தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்ததால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. மாதக் கணக்கில் இந்தப் போர் தொடர்ந்து நடக்கிறது. போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக உலகளவில் பெரும் பொருளாதார பின்னடைவும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள சீவிரோடோநெட்ஸ்க் மற்றும் கார்கிவ் ஆகிய பகுதிகளில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன.
கடந்த திங்கள்கிழமையன்று உக்ரைனில் பரபரப்பான ஷாப்பிங் மாலில் ரஷ்ய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியதில் 16 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன.