மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு,ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 39 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், உத்தவ் தாக்கரேவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அசாம் மாநிலம் கவுகாத்தில் முகாமிட்டுள்ளனர்.
16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யும் துணை சபாநாயகரின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் ஜூலை 12 ஆம் தேதி வரை தடைவிதித்தது.
இந்நிலையில் டெல்லி சென்ற எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக முன்னாள் முதலமைச்சருமான பட்னவிஸ், நேற்று இரவு மும்பை திரும்பியதோடு, ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து சிவசேனா அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.
இச்சூழ்நிலையில் நாளை காலை 11 மணிக்கு சிறப்பு பேரவை கூட்டத்தை கூட்டுமாறு, ஆளுநர் கோஷ்யாரி பேரவை செயலருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அதில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேஅரசு மீதான பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒரே தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பை மாலை 5 மணிக்குள் நடத்தி முடிக்குமாறும் ஆணையிட்டுள்ளார்.
பேரவை வளாகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போதிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், பேரவை நிகழ்ச்சிகள் முழுவதையும் நேரலை செய்ய வேண்டும் எனவும் ஆளுநர் கோஷ்யாரி ஆணையிட்டுள்ளார். இச்சூழ்நிலையில், கவுகாத்தியில் முகாமிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்போம் என தெரிவித்துள்ளார்.