மகாராஷ்ட்ரா மாநில சட்டப்பேரவையில் நாளை காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொண்டதாக ஏக்நாத் சிண்டே தலைமையிலான சிவசேனா உறுப்பினர்கள் 39 பேர் தெரிவித்தனர். இதையடுத்து ஜூன் 30ஆம் நாள் சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்குக் கோரிப் பெரும்பான்மையை மெய்ப்பிக்கும்படி உத்தவ் தாக்கரேக்கு ஆளுநர் பகத்சிங் கோசியாரி உத்தரவிட்டுள்ளார்.
இதை எதிர்த்து சிவசேனா சட்டமன்றக் கொறடா சுனில் பிரபு தாக்கல் செய்த மனுவில் 16 உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்வது பற்றிய வழக்கு நிலுவையில் உள்ளதால், பலப்பரீட்சை நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தகுதி நீக்க நோட்டீஸ் செல்லுமா? செல்லாதா? என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் எனத் தெரிவித்த நீதிபதிகள், அதற்கும் சட்டப்பேரவையின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கும் என்ன தொடர்புள்ளது? என வினவினர்.
அதற்குப் பதிலளித்த சிவசேனா வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வி, ஒருபுறம் தகுதி நீக்க நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மறுபுறம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது முரண்பாடாக உள்ளதாகத் தெரிவித்தார்.
தகுதி நீக்க வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, மறுநாளே சட்டப்பேரவையில் பெரும்பான்மையை மெய்ப்பிக்கும்படி ஆளுநர் எப்படி உத்தரவிட முடியும் எனத் தெரிவித்தார். நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லாமல் ஆளுநர் பலப்பரீட்சைக்கு உத்தரவிட்டாரா? என்றும், நாளையே பலப்பரீட்சை நடத்தாவிட்டால் என்ன நடந்துவிடும்? என்றும் வினவினார்.
ஏக்நாத் சிண்டே சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீரஜ் கிசன் கவுல், தகுதி நீக்க நடவடிக்கைகள் பலப்பரீட்சையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக வாதிட்டார். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை மெய்ப்பிக்கச் சொல்வது ஆளுநரின் விருப்பத்துக்கு உட்பட்டது என்றும், ஆளுநரின் முடிவு முறையற்றதாகவோ, நேர்மையற்றதாகவோ இருந்தாலன்றி அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவருக்கு கொரோனா தொற்றுள்ளதையும், காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர் வெளிநாட்டில் உள்ளதையும் குறிப்பிட்ட சிங்வி, ஒரு நாளைக்குள் பலப்பரீட்சை நடத்த உத்தரவிட்டால் அவர்கள் எப்படிப் பங்கேற்க முடியும்? என வினவினார்.
பெரும்பான்மையை இழந்த அரசு, ஆதரவை விலக்கிக் கொண்டவர்களைத் தகுதி நீக்கம் செய்யுமாறு சட்டசபை சபாநாயகரிடம் கூறிவிட்டால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் காத்திருக்க வேண்டுமா? என நீதிபதிகள் வினவினர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் இரவு 9 மணி அளவில் தீர்ப்பளித்த நீதிபதிகள், மகாராஷ்ட்ரா சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம் என உத்தரவிட்டனர். நாளை காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும், தகுதி நீக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் 16 பேரும் வாக்களிக்கலாம் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவுகள் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டவை என்ற அவர்கள் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.