மனைவி, 3 மாத குழந்தையை கொன்றதாக கைதான வாலிபர் விடுவிப்பு-கீழ்கோர்ட்டு தீர்ப்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது

பெங்களூரு:

காதல் திருமணம்

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா டாபஸ்பேட்டை அருகே பேகூர் கிராமத்தை சேர்ந்தவர் கிரீஷ் (வயது 32). இவர் தனது கிராமத்தை சேர்ந்த பாக்யம்மா என்ற பெண்ணை காதலித்து வந்தார். மேலும் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி கிரீஷ், பாக்யம்மாவிடம் உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளார். இதனால் பாக்யம்மா கர்ப்பம் அடைந்தார்.இதுபற்றி அறிந்த கிரீஷ், பாக்யம்மாவை திருமணம் செய்ய மறுத்து விட்டார். பின்னர் கிராமத்தில் நடந்த பஞ்சாயத்தார் உத்தரவை தொடர்ந்து கிரீஷ், பாக்யம்மாவை திருமணம் செய்து கொண்டார்.

2,638 அடி உயர மலை

திருமணம் முடிந்த சில நாட்களில் பாக்யம்மாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று கிரீஷ் தனது மனைவி மற்றும் தனது 3 மாத குழந்தையை 2,638 அடி உயர சிவகங்கே மலையில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்றார்.

இந்த நிலையில் மலை உச்சியில் இருந்து பாக்யம்மாவும், அவரது 3 மாத குழந்தையும் தவறி விழுந்ததாக சொல்லப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் டாபஸ்பேட்டை போலீசார், தீயணைப்பு படையினர் அங்கு சென்று பாக்யம்மா, குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாக்யம்மாவின் உடல் மட்டும் மீட்கப்பட்டது. குழந்தையின் உடலை மீட்க முடியவில்லை.

கைது

இந்த நிலையில் பாக்யம்மா, குழந்தையை மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ததாக பாக்யம்மாவின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் டாபஸ்பேட்டை போலீசார் கிரீசை கைது செய்தனர். மேலும் அவர் மீது பெங்களூரு புறநகர் மாவட்ட கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த சம்பவம் கடந்த 2010-ம் ஆண்டு நடந்து இருந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் கிரீஷ் தான் மனைவி, குழந்தையை கொலை செய்தார் என்று போலீசார் தகுந்த ஆதாரத்தை சமர்ப்பிக்க தவறிவிட்டதாக கூறி இந்த வழக்கில் இருந்து கிரீசை கடந்த 2015-ம் ஆண்டு விடுவித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

கீழ் கோர்ட்டு தீர்ப்பு உறுதி

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சோமசேகர், சிவசங்கர் அடங்கிய அமர்வில் நடந்து வந்தது. கடந்த 7 ஆண்டுகளாக நடந்த வழக்கின் இறுதி விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டறிந்தனர். பின்னர் நீதிபதிகள் தீர்ப்பு அளிக்கையில், இந்த கொலை வழக்கில் கிரீஷ் தான் குற்றவாளி என்பதை நிருபணம் செய்ய அரசு தரப்பு தவறிவிட்டது. போலீசார் தாக்கல் செய்த அறிக்கை முரணாக உள்ளது. நேரில் பார்த்த சாட்சிகளும் இல்லை. இதனால் இந்த வழக்கில் இருந்து கிரீசை விடுவித்த கீழ் கோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்கிறோம் என்று நீதிபதிகள் கூறினர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.