மும்பை: மஹாராஷ்டிராவில் நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா முறையிட்டுள்ளது. 16 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு நிலுவையில் உள்ள போது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட்டது சரியல்ல எனக்கூறியுள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அவர்கள் அனைவரும் அசாம் தலைநகர் கவுகாத்தியில் தங்கி உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்த உத்தவ் மற்றும் சிவசேனா தலைவர்கள் எவ்வளவு முயன்றும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து 16 எம்.எல்.ஏ.,க்களுக்கு விளக்கம் கேட்டு துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என கேள்வி எழுப்பி இருந்தார். இதனை எதிர்த்து எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், மேலும் சில சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களும் கவர்னர் பகத்சிங் கோஷியாரிக்கு இமெயில் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், அவர்கள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனிடையே, சட்டசபையில் நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தவ் தாக்கரேவுக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக நாளை சட்டசபையை கூட்டும்படி சட்டசபை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். கவர்னரின் இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சி தாக்கல் செய்த மனுவில் 16 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு நிலுவையில் உள்ள போது, ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட்டது சரியல்ல எனக்கூறப்பட்டுள்ளது.
கோவா பயணம்
இது தொடர்பாக கவுகாத்தியில் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், நம்பிக்கை ஓட்டெடுப்பிற்கு தயாராக உள்ளோம். நாளை மும்பை திரும்ப உள்ளேன் என்றார்.கவுகாத்தியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் கோவா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அங்கு சொகுசு ஓட்டலில் 60க்கும் மேற்பட்ட அறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அங்கிருந்து சட்டசபைக்கு நேரடியாக செல்லும்படி திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நீதிமன்ற அவமதிப்பு
சிவசேனா எம்.பி., பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், எம்.எல்.ஏ.,க்கள் மீதான தகுதி நீக்க வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது எப்படி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த முடியும்?. தகுதி நீக்கம் தொடர்பாக முடிவு எடுக்காத சூழ்நிலையில் எம்.எல்.ஏ.,க்கள் எப்படி ஓட்டு போட முடியும்? உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிறைவு பெறாத நிலையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவது நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என்றார்.
சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் கூறுகையில், மஹாராஷ்டிரா கவர்னரின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்.16 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு நிலுவையில் உள்ள போது இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. இந்த தருணத்திற்காக கவர்னர் காத்து கொண்டிருப்பது போல் உள்ளது என்றார்.