சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் (பொறுப்பு) எம்.எஸ்.பிரசாந்த் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகராட்சி பள்ளி மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் தாங்கள் கற்றவற்றை விளக்குவதற்காக பள்ளிகள், உதவி கல்வி அலுவலர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் மாநகராட்சி அளவில் கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளன. அதற்காக ரூ.18 லட்சத்து 62 ஆயிரம் செலவிட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிறு வயதில் இருந்தே ஆண், பெண் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக மாநகராட்சி பள்ளிகளில் பாலின குழுக்கள் அமைக்கவும், அது தொடர்பாக கல்வி அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கவும் மாமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் 31 மழலையர் பள்ளிகளுக்கு மாண்டிசோரி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. அது தொடர்பான பயிற்சிகளையும் ஆசிரியர்களுக்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் மூலம் 2 செட் சீருடைகள் ரூ.7 கோடியே 50 லட்சத்தில் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இளையோர் நாடாளுமன்ற கூட்டங்களை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநகரப் பகுதியில் கால்வாய்கள் மற்றும் ஆறுகளை தூர்வாரவும், ஆகாயத் தாமரை செடிகளை அகற்றவும் ரூ.23 கோடியில் 5 ஆண்டுகள் இயக்குதல் மற்றும் பராமரிப்பு சேவையுடன் 2 ரோபோடிக் பல்நோக்கு எஸ்கவேட்டர்கள் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளையின் கீழ், சென்னை விமான நிலைய ஓடுபாதை பாலம் முதல் நந்தம்பாக்கம் பாலம் வரை உள்ள அடையாறின் இரு கரையோரங்களில் ரூ.2 கோடியே 53 லட்சம் செலவில் மரங்களை நட்டு பராமரிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரி உயர்வு தொடர்பாக சொத்து உரிமையாளர்களுக்கு தெரிவிக்க ரூ.1 கோடியே 75 லட்சத்தில் அஞ்சல் துறை மூலமாக விவரங்கள் அனுப்ப அனுமதி வழங்கப்பட்டது. மேலும் மாநகராட்சியின் சொந்த வருவாய் ஆதாரங்களை உயர்த்துவதற்காக திட்டங்களை உருவாக்கவும், அதற்கான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்கும் காலத்தை நீட்டிப்பு செய்யவும் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.