வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகை மீனாவின் நிலை குறித்து வேதனை தெரிவித்தார்.
மாரடைப்பால் உயிரிழந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சிரித்த முகத்துடன் பார்த்த மீனாவை இவ்வாறு அழுவதை பார்க்க முடியவில்லை என இயக்குனரும், நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஊடகத்திடம் பேசிய அவர், ‘மிகவும் கடினமான ஒரு சூழலில் மீனாவை பார்ப்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. எப்பவுமே சிரித்துக் கொண்டே இருந்த ஒரு முகம் தான். என் இயக்கத்தில் அவர் எட்டு படங்களில் நடித்திருந்தாலும், அழக்கூடிய காட்சியை விளக்கும்போது கூட சிரித்துக் கொண்டே தான் கேட்பார்.
அப்படி ஒரு சிரித்த முகத்தை பார்த்துவிட்டு, இப்போது இப்படி அழுதுகொண்டிருக்கும் முகத்தை பார்க்க முடியவில்லை.
சிறுவயது முதல் அவரது அம்மாவின் அரவணைப்பில் தான் சினிமாவில் நடித்தார்.
ஒரு அவரது தந்தை உயிரிழந்தபோது கணவர் தான் அவருக்கு ஒரே ஆறுதலாக இருந்தார்.
ஆனால் அவரும் விட்டு சென்றுவிட்டார். மரணம் எல்லோருக்கும் வரும், ஆனால் அகால மரணம் என்பது தாங்கிக்கொள்ள முடியாத துக்கம். வித்யாசாகரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.