மேகேதாட்டு அணை | கர்நாடகாவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடாது – மத்திய அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை

வேலூர்: மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எந்தவிதமான தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் அனுமதியையும் மத்திய அரசு வழங்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வேலூர் கோட்டை மைதானத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 30,423 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, முடிவுற்ற பணிகளுக்கான திறப்பு விழா மற்றும் புதிய திட்டங்களுக்கான தொடக்க விழா இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: ‘‘இந்திய சுதந்திர போராட்டம் 1857-ம் ஆண்டு நடைபெற்றதாக கூறுவார்கள். ஆனால் அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே வேலூர் கோட்டையில் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக அனலும், கனலும் தெறித்த ஊர் தான் இந்த வேலூர். இந்தியர்கள் அடிமைகளாக வாழ தயாரில்லை என்று தெரிவித்த வேலூர் புரட்சி நடந்த இந்த கோட்டை மைதானத்தில் இந்த விழா நடைபெறுகிறது.

தலைவர் கலைஞர், பேராசிரியர் நம்மை அடுத்தடுத்து விட்டு விலகிய நிலையில் கழக பொறுப்பு என் தோள்களில் விழுந்தது. அப்போது என்னை தாங்கி நிற்கக்கூடிய தூணாக இருந்தவர் தான் துரைமுருகன். அவர் என் தோளோடு தோள் கொடுத்து நிற்கிறார். அவரை என்னுள் ஒருவராக நினைத்து அன்பு செலுத்துகிறேன். அவரை கலைஞர் இடத்தில், பேராசிரியர் இடத்தில் வைத்துப் பார்க்கிறேன்.

வேலூர் மாவட்டத்தில் மகிமண்டலத்தில் தொழிற்பேட்டை, அப்துல்லாபுரத்தில் 5 ஏக்கரில் டைடல் பூங்கா, காட்பாடி சேர்க்காட்டில் 6 ஏக்கரில் புதிய அரசு கலைக்கல்லூரி, பள்ளிகொண்டாவில் உழவர் சந்தை, வேலூர் புறவழிச்சாலை, காட்பாடி சத்துவாச்சாரி இடையில் ரூ.120 கோடியில் உயர்மட்ட மேம்பாலம், சேர்க்காட்டில் 6 ஏக்கரில் பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்டவை அமைய உள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 9.22 சதவீதம், மொத்த வரி வருவாயில் தமிழகத்தின் பங்கு 6 சதவீதம். ஏற்றுமதியில் 8.4 சதவீதம், ஜவுளி உற்பத்தியில் 19.4 சதவீதம், கார் உற்பத்தியில் 32.5 சதவீதம் என பட்டியலிட்டு பிரதமர் முன்னிலையில் உரிமையோடு கேட்டேன். நமக்கு ஒன்றிய அரசு அளிக்கும் பங்களிப்பு 1.21 சதவீதம் மட்டும் தான். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற உணர்வோடு குறிப்பிட்டேன். அதுதான் உண்மையான கூட்டறவு கூட்டாட்சியாக அமையும் என்றேன்.

காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு முழு உரிமை உள்ளது. அதை பெறுவதில் திமுக அரசு எந்தளவுக்குச் சென்றும் போராடும் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். காவிரியின் குறுக்கே மேகேதாட்டில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டிருந்தது. கர்நாடக அரசுக்கு பொழுது போகவில்லை என்றால் அணை கட்டுகிறேன் என்று கூறுவது, நிதி ஒதுக்குவது, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது, டெல்லிக்கு படையெடுக்கும் வேலை செய்து வருகின்றனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முனைப்பு காட்டியது. இதை தடுத்து நிறத்தக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். நமது தரப்பில் நீர்வளத்துறை அமைச்சர் தலைமையிலான குழுவினர் டெல்லி சென்று நமது தரப்பு வாதங்களை எடுத்து வைத்து தமிழகத்தின் உடன்பாடு இல்லாமல் அணை கட்ட முடியாது என்ற வாக்குறுதியைப் பெற்று திரும்ப வந்தனர். காவிரி கூட்டத்தில் நடைபெற இருந்த விவாதமும் நீக்கப்பட்டது.

2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தொடர்புடைய மாநிலத்தின் அனுமதி, ஒன்றிய அரசின் அனுமதி பெறாமல் அணையை கட்ட முடியாது. ஆகவே, கர்நாடக அரசின் முடிவானது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்பதால் அணை கட்ட கர்நாடக அரசுக்கு எந்த விதமான தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு அளிக்கக்கூடாது என இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

இப்படி தமிழகத்தின் உரிமைகளுக்காக எந்த சமரசங்களுக்கும் இடமில்லாமல் திமுக போராடும். நிதி உரிமை, சமூக உரிமை, கல்வி உரிமை, காவிரி உரிமை குரல் கொடுக்கிறோம். இது ஒன்றிய அரசுக்கு எதிரான குரலாக சிலரால் பார்க்கப்படுகிறது. இது தமிழக மக்களுக்கான குரல். திமுக எதிர்கட்சியாக இருந்த போதும், ஆளுங்கட்சியாக இருக்கும் போதும் மக்களின் குரலாக ஒலிக்கும்’’ இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

முன்னதாக விழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் பங்கேற்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், அமலு விஜயன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முடிவில், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி நன்றி தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.