மதுரை: ”மேயர் அங்கியை அணிந்துகொண்டு சுயமரியாதையைக் காற்றில் பறக்கவிட்டு உதயநிதியின் காலில் விழுவதுதான் திராவிட மாடலா?” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் கூறியது: ”திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக அதிமுக உள்ளது. ஜெயலலிதா காலத்தில் தேசிய அளவில் அதிமுகவை மூன்றாம் பெரிய இயக்கமாக உருவாக்கினார். எங்களை வழிநடத்திச் சென்ற ஜெயலலிதா காலில் விழுவதை கேலி செய்தும், நையாண்டி செய்தனர். ஆனால், இன்றைக்கு திமுகவின் தன்மானம், சுயமரியாதை எங்கே போனது?
தஞ்சையில் உதயநிதி வந்தபோது அங்கு தஞ்சை மேயர் அங்கியுடன் சென்று உதயநிதியின் காலில் விழுந்துள்ளார். உதயநிதி கண்டிக்காமல் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டுள்ளார். காலில் விழுவதை சுயமரியாதை என்று விமர்சித்த திமுக, இதற்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறது?
மேயர் அங்கியுடன் பொதுவெளியில் காலில் விழும் உரிமையை யார் கொடுத்தது?
மூத்தோர் காலில் இளையோர் விழுவது தமிழர்கள் பண்பாடு, கலாசாரம். ஆனால் இன்றைக்கு வயது இளையோரிடம் மூத்தோர் காலில் விழுந்து சுயமரியாதையை காற்றில் பறக்கப்பட்டுள்ளது. இந்த புது கலாசாரம்தான் திராவிடத்தின் மாடலா? திராவிட மாடலில் சுயமரியாதை இப்படித்தான் அம்பலப்படுத்துகிறதா?
நிச்சயம் இதை மக்களே கேட்பார்கள். முதல்வர் வருகைக்காக சாலை போடுவது என்பது பாதுகாப்பு நடவடிக்கை. ஆனால், வேலூரில் கேலிக் கூத்தாக அங்குள்ள காளிகாம்பாள் தெருவில் இரவோடு இரவாக சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்றாமல் சாலை போட்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.